அடுத்த குறி இண்டர்நெட் கேபிள்களா? ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் புதிய எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் பதற்றம் தற்போது கடல்வழி எண்ணெய் விநியோகத்தைத் தாண்டி, கடலுக்கடியில் அமைந்துள்ள இணையத் தரவு கேபிள்கள் (Undersea Internet Cables) பக்கம் திரும்பியுள்ளது. ஈரானின் 'தஸ்னிம்' செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை, ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் டிஜிட்டல் உள்கட்டமைப்புகளுக்குப் பெரும் அச்சுறுத்தல் நிலவுவதைச் சுட்டிக்காட்டியுள்ளது. எண்ணெய் விநியோகத்திற்கு முக்கியமான இடமாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி, டிஜிட்டல் உலகிற்கும் மிக முக்கியமான தமனியாக உள்ளது.
எச்சரிக்கை
டிஜிட்டல் முனையமாக மாறும் ஹார்முஸ் ஜலசந்தி
FALCON, AAE-1, TGN-Gulf மற்றும் SEA-ME-WE போன்ற உலகின் மிக முக்கியமான நீர்மூழ்கிக் கேபிள்கள் இந்த குறுகிய நீரிணை வழியாகவோ அல்லது அதற்கு அருகிலோ செல்கின்றன. வளைகுடா நாடுகளின் வங்கிச் சேவைகள், கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் தொலைத்தொடர்பு ஆகியவற்றை இந்த கேபிள்களே இயக்குகின்றன. ஒரே நேரத்தில் பல கேபிள்கள் சேதமடைந்தால், ஒட்டுமொத்த பாரசீக வளைகுடா பிராந்தியமும் டிஜிட்டல் இருளில் மூழ்கும் அபாயம் உள்ளதாக அந்த அறிக்கை எச்சரிக்கிறது.
பாதிப்பு
வளைகுடா நாடுகளுக்கு ஏற்படும் பொருளாதார பாதிப்பு
இந்தத் தரவு கேபிள்களின் முடக்கம் ஈரானை விட ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன், குவைத் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளையே அதிகம் பாதிக்கும். ஏனெனில், இந்த நாடுகள் தங்களின் நிதி மற்றும் தகவல் தொடர்புத் தேவைகளுக்கு இந்த வழித்தடத்தையே பெரிதும் நம்பியுள்ளன. குறிப்பாக அமீரகம் மற்றும் பஹ்ரைனில் உள்ள கிளவுட் டேட்டா சென்டர்கள் இத்தகைய பாதிப்புகளால் பெரும் பொருளாதார இழப்புகளைச் சந்திக்க நேரிடும். ஏற்கனவே அமீரகத்தில் உள்ள அமேசான் (AWS) மையங்கள் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில், இந்த எச்சரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.
வரலாறு
கடந்த கால பாதிப்புகளும் தற்போதைய அச்சமும்
கடலுக்கடியில் கேபிள்கள் சேதமடைவது என்பது வெறும் கற்பனையல்ல; 2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில் செங்கடல் பகுதியில் ஏற்பட்ட பதற்றத்தின் போது பல கேபிள்கள் சேதமடைந்து இணைய வேகம் வெகுவாகக் குறைந்தன. ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களும் இத்தகைய உள்கட்டமைப்புகளைத் தாக்கப்போவதாக ஏற்கனவே எச்சரித்துள்ளனர். ஈரானிய ஊடகங்களின் இந்த அறிக்கை, வெறும் தொழில்நுட்ப மதிப்பீடாக இல்லாமல், ஒரு மூலோபாய சமிக்ஞையாகவே (Strategic Signal) பார்க்கப்படுகிறது. கேபிள்கள் மற்றும் தரவு மையங்களை வரைபடமாக்குவதன் மூலம், ஒருவேளை போர் மூண்டால் எந்தப் புள்ளிகளில் அழுத்தத்தைக் கொடுக்கலாம் என்பதை ஈரான் கோடிட்டுக் காட்டுகிறது.
கண்கணிப்பு
கண்காணிக்க முடியாத ஆபத்து
கடலுக்கடியில் ஆயிரக்கணக்கான அடி ஆழத்தில் இருக்கும் கேபிள்களைக் கண்காணிப்பதோ அல்லது பாதுகாப்பதோ மிகவும் கடினமான காரியம். ஒரு சிறிய வெட்டு ஏற்பட்டாலும், அது எல்லைகளைத் தாண்டிய தகவல் தொடர்பு முடக்கத்திற்கும், நிதி அமைப்புகளின் வீழ்ச்சிக்கும் வழிவகுக்கும். தற்போது அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நிலவும் முறுக்கலான சூழலில், தற்செயலான விபத்தோ அல்லது திட்டமிட்ட தாக்குதலோ ஏற்பட்டால், அது உலகளாவிய டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு பேரழிவை உண்டாக்கும். இந்த 'கண்ணுக்குத் தெரியாத' உள்கட்டமைப்பு இப்போது பிராந்தியத்தின் மிக முக்கியமான பாதுகாப்புப் புள்ளியாக மாறியுள்ளது.