மொராக்கோ பூகம்பம்: பலி எண்ணிக்கை 820ஆக உயர்வு
மத்திய மொராக்கோவில் ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 820ஆக உயர்ந்துள்ளது. மொராக்கோவில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், சுற்றுலாப் பயணிகளின் ஹாட் ஸ்பாட்டான மராகேஷிலிருந்து தென்மேற்கே 72 கிலோமீட்டர் (45 மைல்) தொலைவில் இரவு 11:11 மணிக்கு(2211 GMT) ஏற்பட்டது. கடலோர நகரங்களான ரபாட், காசாபிளாங்கா மற்றும் எஸ்ஸௌயிராவிலும் வலுவான நடுக்கம் உணரப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட உள்துறை அமைச்சக புள்ளிவிவரங்களின்படி, இந்த நிலநடுக்கத்தில் 820 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அல்-ஹவுஸ் மற்றும் தாரூடன்ட் மாகாணங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.
இதுவரை மொராக்கோ நாட்டில் ஏற்பட்டதிலேயே இதுதான் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம்
சிச்சாவா, அஜிலால் மற்றும் யூசுஃபியா மாகாணங்களிலும், மராகேஷ், அகாதிர் மற்றும் காசாபிளாங்கா பகுதிகளிலும் இறப்புகள் பதிவாகியுள்ளன. மேலும், இந்த நிலநடுக்கத்தால் 672 பேர் காயமடைந்துள்ளனர், இதில் 205 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை மொராக்கோ நாட்டில் ஏற்பட்டதிலேயே இதுதான் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்று கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கம் அண்டை நாடான அல்ஜீரியாவிலும் உணரப்பட்டது. ஆனால், அங்கு பொருள் சேதமோ உயிரிழப்புகளோ ஏற்படவில்லை. 2004 ஆம் ஆண்டில், வடகிழக்கு மொராக்கோவின் அல் ஹோசிமாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் குறைந்தது 628 பேர் கொல்லப்பட்டனர். 1960 ஆம் ஆண்டில் அகாடிரில் 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் 12,000 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.