டெல்லி மாணவர்கள் போராட்டம் குறித்து ஐநா செய்தித் தொடர்பாளர் கருத்து
செய்தி முன்னோட்டம்
புதுடெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) உட்பட பல அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது. டெல்லியில் நடக்கும் சம்பவங்களை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகத் தெரிவித்துள்ள ஐநா, அமைதியான முறையில் தங்களது ஜனநாயக உரிமைகளை வெளிப்படுத்தும் மாணவர்கள் மீது அத்துமீறல்கள் நடத்தப்படக் கூடாது என வலியுறுத்தியுள்ளது.
ஸ்தீபன் டுஜாரிக்
பயமின்றிப் போராட அனுமதி வழங்கப்பட வேண்டும்
ஐநா பொதுச் செயலாளரின் செய்தித் தொடர்பாளரான ஸ்தீபன் டுஜாரிக் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், "டெல்லியில் நடைபெறும் போராட்டங்கள் குறித்து நாங்கள் நன்கு அறிவோம்" என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், "அமைதியான வழியில் போராட்டம் நடத்த விரும்பும் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கைது செய்யப்படுவோம் என்ற பயமோ, காயமடைவோம் என்ற அச்சமோ அல்லது அச்சுறுத்தலோ இன்றி தங்களது கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும்." என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
குற்றச்சாட்டு
மனித உரிமை கண்காணிப்பு அமைப்பின் குற்றச்சாட்டு
ஐநா செய்தித் தொடர்பாளரின் இந்த அறிக்கை வெளியாவதற்கு ஒரு நாளுக்கு முன்பு, சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகமான மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு போராட்டக்காரர்கள் மீது காவல்துறை நடத்திய வன்முறை குறித்துக் கண்டனம் தெரிவித்திருந்தது.
"இந்திய இளைஞர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி அமைதியான முறையில் பேரணி நடத்த மட்டுமே விரும்பினர்.
ஆனால், காவல்துறை அவர்கள் மீது தடியடி, கண்ணீர் புகைக் குண்டுகள் மற்றும் இணைய முடக்கத்தைப் பயன்படுத்தியுள்ளது." என அந்த அமைப்பின் துணை ஆசிய இயக்குநர் மீனாட்சி கங்குலி சாடியிருந்தார்.
போராட்டப் பின்னணி
காக்ரோச் ஜனதா கட்சி பேரணி மற்றும் பின்னணி
கடந்த ஜூன் மாதம் நீட் தேர்வு குளறுபடிகளுக்கு எதிராகத் தொடங்கப்பட்ட இந்த மாணவர் போராட்டம், தற்போது அரசாங்க ஊழல் மற்றும் வேலைவாய்ப்பின்மைக்கு எதிரான மிகப்பெரிய போராட்டமாக உருவெடுத்துள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒருவர் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களைக் கரப்பான் பூச்சிகள் என ஒப்பிட்டுப் பேசியதாகக் கூறி, அதை வைத்து காக்ரோச் ஜனதா கட்சி என்ற பெயரில் அமைப்பு தொடங்கப்பட்டது.
இந்த அமைப்பு நீட் தேர்வு குளறுபடிக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் தொடங்கிய போராட்டம், மிகப்பெரிய அளவில் வெடித்துள்ளது.
இதற்கிடையே, போராட்டத்திற்கு பணிந்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.