பாலஸ்தீன மக்கள் வாழும் காசா பகுதியில் என்ன தான் பிரச்சனை?
2014ஆம் ஆண்டு முதல் 187,518 பேர் காசாவில் உள்ள தங்கள் வீடுகளை காலி செய்துள்ளதாக ஐநா சபையின் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது, அதில் 137,427 பேர் UNRWA பள்ளிகளில் தஞ்சமடைந்துள்ளனர். UNRWA என்பது பாலஸ்தீன அகதிகளுக்கான ஐநாவின் நிவாரண மற்றும் பணி நிறுவனமாகும். 41,000க்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்த மக்கள், அவர்களது உறவினர்கள் வீட்டில் தங்கியுள்ளதாகவும் ஐநா தெரிவித்துள்ளது. போரின் காரணமாக, கான் யூனிஸ் மற்றும் காசாவின் மத்தியப் பகுதியிலுள்ள பாலஸ்தீனிய மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டும் என்று இஸ்ரேலியப் படைகள் நேற்று இரவு கட்டளையிட்டன. இது நூறாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காசா பகுதியை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
காசா பகுதி என்பது இஸ்ரேல், எகிப்து மற்றும் மத்தியதரைக் கடலுக்கு இடையே 41 கிமீ நீளமும் 10-கிமீ அகலமும் கொண்ட பிரதேசமாகும். இந்த பகுதியில் சுமார் 2.3 மில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர். உலகிலேயே அதிக மக்கள் தொகை அடர்த்தியைக் கொண்ட பிரதேசம் இதுவாகும். அதாவது ஒரு குறுகிய பகுதிக்குள் மிக அதிகமான மக்கள் வாழும் பகுதி இது. காசா பகுதியை பயங்கவாத குழுவாக கருதப்படும் 'ஹமாஸ்' ஆட்சி செய்து வருகிறது. பாலஸ்தீனியர்களுக்கு சொந்தமான பிராந்தியங்களை திரும்ப பெற்று, பலஸ்தீனிய நாட்டை நிறுவ வேண்டும் என்பதே இந்த குழுவின் முக்கிய குறிக்கோளாகும். இஸ்ரேல் நிறுவப்பட்ட போது, அந்த பகுதியில் வசித்து வந்த அரேபியர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். அவர்களை தான் பாலஸ்தீனியர்கள் என்று அழைக்கிறோம்.
காசா மக்களின் அவல நிலை
காசா பகுதியை 'ஹமாஸ்' பயங்கரவாத குழு ஆட்சி செய்து வந்தாலும், காசாவின் எல்லைகள் இஸ்ரேல் மற்றும் எகிப்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. காசா மற்றும் அதன் கரையோரத்தில் உள்ள வான்வெளி முழுவதும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. காசா பகுதிக்குள் யார் செல்லலாம் செல்ல கூடாது என்பதை எகிப்து கட்டுப்படுத்துகிறது. ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை ஒடுக்கும் நோக்கத்தோடு, இஸ்ரேலும் எகிப்தும் காசா பகுதியின் எல்லைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இதனால், காசாவில் கடும் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அங்கு வாழும் பலர் உணவு மற்றும் தண்ணீர் போன்ற அடிப்படைத் தேவைகளைப் பெற போராடுகிறார்கள். அந்த நெருக்கடியான பகுதியில் கொடிகட்டி பறக்கும் பயங்கரவாதமும் அந்த பகுதியில் வாழும் அப்பாவி மக்களை கடுமையாக பதித்து வருகிறது.
இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சனை எப்போது தொடங்கியது?
காசாவின் மக்கள் தொகையில் சுமார் 80% பேர் சர்வதேச உதவியை நம்பியிருக்கின்றனர் என்று ஐ.நா. கூறுகிறது. மேலும் ஒரு மில்லியன் மக்கள் தினசரி உணவுக்கு கூட வழியில்லாமல் இருக்கின்றனர். முதலாம் உலகப் போரில் ஒட்டோமான் பேரரசு தோற்கடிக்கப்பட்டதை அடுத்து, யூத சிறுபான்மையினரும், அரேபிய பெரும்பான்மையினரும் வாழ்ந்த பாலஸ்தீனத்தை பிரிட்டன் கைப்பற்றியது. அதன் பிறகு, பாலஸ்தீனத்தை யூதர்களின் தாயகமாக உருவாக்குவதற்கு சர்வதேச சமூகமும் பிரிட்டனும் முயற்சித்தது. இதனால், யூதர்கள் மற்றும் அரேபியர்களுக்கு இடையே பதட்டம் அதிகரித்தது. 1920கள் மற்றும் 1940களில், பல யூதர்கள் ஐரோப்பாவில் துன்புறுத்தப்பட்டதால், அதில் இருந்து தப்பிக்க அவர்கள் ஐரோப்பாவில் இருந்து பாலஸ்தீனத்திற்கு குடி பெயர்ந்தனர். அதனை தொடர்ந்து, யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையிலான உரசலும், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பும் தீவிரமடைந்தன.
இஸ்ரேல் நாடு நிறுவட்ட பிறகு ஏற்பட்ட பிரச்சனைகள்
1947இல், ஐக்கிய நாடுகள் சபை பாலஸ்தீனத்தை இரு நாடுகளாக பிரிக்க வாக்களித்தது. இந்த திட்டத்தை யூத தலைமை ஏற்றுக்கொண்டது. ஆனால் அரபு தரப்பு அதை முற்றிலுமாக நிராகரித்துவிட்டது. அதனால், அது ஒருபோதும் செயல்படுத்தப்படவில்லை. 1948இல், இந்த சண்டையை முடிவுக்கு கொண்டுவர முடியாமல், பிரிட்டிஷ் அதிகாரிகள் பின்வாங்கிவிட்டனர். அதன் பின், யூத தலைவர்கள் இஸ்ரேல் என்ற நாட்டை நிறுவினர். பல பாலஸ்தீனியர்கள் இதை கடுமையாக எதிர்த்தார்கள். அதனால் அப்போது போர் வெடித்தது. அப்போது நூறாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். அதில் பெரும்பாலானோர் அண்டை நாடுகளில் அகதிகளாக புகுந்தனர். தற்போது, பெரும்பாலான பாலஸ்தீனிய அகதிகள் மற்றும் அவர்களது சந்ததியினர் காசா, மேற்குக் கரை, கிழக்கு ஜோர்டான்,சிரியா மற்றும் லெபனான் ஆகிய நாடுகளில் வாழ்கின்றனர்.