ஜப்பான் புகுஷிமா அணுமின்நிலைய கழிவுநீரை கடலில் கலக்க ஐ.நா. அனுமதி; சீனா எதிர்ப்பு
ஜப்பான் நாட்டில் உள்ள புகுஷிமா அணுமின் நிலையம், சுனாமியால் பாதிக்கப்பட்டது. அந்த அணுமின் நிலையத்தில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க கழிவுநீரை, பசிபிக் பெருங்கடலில் வெளியிடுவதற்கான ஜப்பானின் திட்டத்திற்கு, ஐநா சபை ஒப்புதல் அளித்துள்ளது. முன்னதாக, சர்வதேச அணுசக்தி முகமைத் தலைவர், ரஃபேல் மரியானோ க்ரோஸி, புதன்கிழமை (ஜூலை 6), புகுஷிமாவில் சுத்திகரிக்கப்பட்ட நீர் ஒரு பைப்லைன் மூலம் கடலோர வசதிக்கு அனுப்பப்படும் இடத்தை, நேரில் பார்வையிட்டார். "நான் பார்த்ததில் திருப்தி அடைந்தேன்" என்று ரஃபேல் மரியானோ க்ரோஸி, ஆலையை சுற்றிப்பார்த்த பிறகு தெரிவித்தார். இந்த விஷயத்தில், ஜப்பான், சர்வதேச அணுசக்தி முகமை மற்றும் ஐநா போன்ற பெரிய சிக்கல்களை சமாளித்தாலும், கழிவு நீர் வெளியீட்டுக்கு இன்னும் பல்முனை எதிர்ப்பு நிலவுகிறது.
மீனவர் அமைப்புகள் எதிர்ப்பு
செவ்வாய்கிழமை (ஜூலை 4) வெளியிடப்பட்ட புகுஷிமா திட்டத்தில், சர்வதேச அணுசக்தி முகமை, அதன் இறுதி அறிக்கையில், சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர், இன்னும் சிறிய அளவிலான கதிரியக்கத்தன்மையைக் கொண்டிருக்கும் என்றாலும், சர்வதேச தரத்தை விட பாதுகாப்பானது மற்றும் அதன் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார தாக்கம் மிகக் குறைவு என்று கூறியுள்ளது. எனினும் உள்ளூர் மீனவ அமைப்புகள், இந்தத் திட்டத்தை நிராகரித்துள்ளன. இதை செயல்படுத்தினால், ஜப்பான் மீன்களுக்கான மதிப்பு பாதிக்கப்படும் என்று அவர்கள் கவலைப்படுகிறார்கள். அதே நேரத்தில், பாதுகாப்புக் கவலைகள் மற்றும் அரசியல் காரணங்களுக்காக தென் கொரியா, சீனா மற்றும் சில பசிபிக் தீவு நாடுகளும், ஜப்பானின் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்க்கின்றன என்பதும் குறிப்பிடப்படவேண்டிய விஷயம்.