உக்ரைன் - ரஷ்யா அவசர எச்சரிக்கை செயலிகளில் சைபர் தாக்குதல்: அணு ஆயுதப் போலி எச்சரிக்கையால் பதற்றம்
செய்தி முன்னோட்டம்
உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளின் பொது அவசர எச்சரிக்கை கைபேசி செயலிகளை இலக்கு வைத்து ஒரே இரவில் அடுத்தடுத்து சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் இரு நாட்டு மக்களுக்கும் அணு ஆயுதத் தாக்குதல், கதிர்வீச்சு மற்றும் வேதியியல் தாக்குதல்கள் குறித்த போலி எச்சரிக்கை செய்திகள் அனுப்பப்பட்டதால் எல்லை இருபுறமும் பெரும் பரபரப்பும் அச்சமும் நிலவியது. உக்ரைனில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் ஏர் அலர்ட் செயலி, ஞாயிற்றுக்கிழமை இரவு 11:00 மணியளவில் திடீரென நாடு முழுவதும் ரெட் லெவல் வான்வழி தாக்குதல் எச்சரிக்கைகளை வெளியிட்டது.
போலி எச்சரிக்கை
கதிர்வீச்சுப் போலி எச்சரிக்கை
வான்வழித் தாக்குதல் எச்சரிக்கையோடு நின்றுவிடாமல், கதிர்வீச்சு ஆபத்து, ரசாயனத் தாக்குதல், தரைவழி போர் மற்றும் ரஷ்யாவின் ஒரேஷ்னிக் ஏவுகணைத் தாக்குதல் தொடங்கப்பட்டுவிட்டதாக போலி செய்திகள் அனுப்பப்பட்டன.
இச்செயலி எதிரிகளால் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த உக்ரைன் மத்திய உளவுத்துறை மற்றும் விமானப்படை, நாட்டில் கதிர்வீச்சு ஆபத்து எதுவும் இல்லை என்றும், பொதுமக்கள் பிற நம்பகமான அரசு ஊடகங்களைப் பின்தொடருமாறும் கேட்டுக்கொண்டனர்.
அதேஷ்
ரஷ்ய அவசரக்கால அமைச்சக செயலி மீது 'அதேஷ்' அமைப்பின் தாக்குதல்
உக்ரைன் செயலி முடக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, ரஷ்ய அவசரக்கால சூழ்நிலைகள் அமைச்சகத்தின் கைபேசி செயலி மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது.
ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதிகளில் இயங்கும் உக்ரைன் ஆதரவு அதேஷ் என்ற கிளர்ச்சிக் குழு இத்தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
உக்ரைனின் 'P1-Suns' ட்ரோன்கள் மூலம் ரஷ்யாவின் அனைத்து பிராந்தியங்களையும் இலக்கு வைத்து அணு ஆயுதப் போர்க்கணைகள் ஏவப்பட்டுள்ளதாக செயலியில் குறுஞ்செய்திகள் பரப்பப்பட்டன.
இத்தாக்குதல்களால் செயலிகளின் செயல்பாடு தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டபோதிலும், நாட்டின் பிரதான பொது எச்சரிக்கை அமைப்புகளும், சைரன்களும் பாதுகாப்பாக இயங்கி வருவதாக ரஷ்ய மற்றும் உக்ரைன் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
தற்போது இரு நாடுகளின் கணினிப் பாதுகாப்பு நிபுணர்களும் இச்செயலிகளின் கட்டுப்பாட்டை மீட்டு, போலிச் செய்திகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.