துருக்கியில் 5வது பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது: ரிக்டர் அளவில் 5.4ஆக பதிவு
இன்று(பிப் 7) மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் துருக்கியை தாக்கியது, இது ரிக்டர் அளவுகோலில் 5.4ஆக பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு(USGS) தெரிவித்துள்ளது. நேற்று அதிகாலை முதல், துருக்கி மற்றும் சிரியாவில் மீண்டும் மீண்டும் நில அதிர்வுகள் ஏற்பட்டு வரும் நிலையில், USGSஇன் படி, துருக்கியின் ஐந்தாவது பெரிய நிலநடுக்கம் நாட்டின் கிழக்குப் பகுதியைத் தாக்கி உள்ளது. துருக்கியில் குறைந்தது 3,419 பேரும், சிரியாவின் அரசு மற்றும் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் 1,602 பேரும் உயிரிழந்துள்ளனர். மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,021ஆக உள்ளது என்று அதிகாரிகள் மற்றும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நேற்று அதிகாலை ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான முதல் நிலநடுக்கத்தை அடுத்து 50க்கும் மேற்பட்ட அதிர்வுகள் உணரப்பட்டது.
மிகபெரும் பூகம்ப மண்டலமான துருக்கி
இதில், நேற்று மதியம் ஏற்பட்ட இரண்டாவது பெரும் நிலநடுக்கமும் அடங்கும். இந்த இரண்டாவது அதிர்வு 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமாக இருந்தது. இதை தொடர்ந்து 6.0 ரிக்டர் அளவில் இன்னொரு பெரிய நிலநடுக்கமும் ஏற்பட்டது. தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட்டு கொண்டே இருப்பதாலும் துருக்கியில் இருக்கும் பனியாலும் மீட்பு பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். துருக்கி ஒரு மிகபெரும் பூகம்ப மண்டலத்தில் அமைந்திருப்பதால் அங்கு இப்படிப்பட்ட நில அதிர்வுகள் ஏற்படுவது புதிதல்ல . 2020இல் துருக்கி மற்றொரு பெரிய பூகம்பத்தால் தாக்கப்பட்டது. அந்த பூகம்பம் 6.7 ரிக்டர் அளவில் நாட்டின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்டிருந்தது. 1999இல், இஸ்தான்புல் அருகே 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில், 18,000 பேர் கொல்லப்பட்டனர்.