துருக்கியை உலுக்கிய மூன்று நிலநடுக்கங்கள்: 3800 உயிரிழப்புகள்; 14,500 பேர் படுகாயம்
துருக்கி மற்றும் சிரியாவில் நேற்று(பிப் 6) ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் 3,800க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமாகியது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றும் வரும் நிலையில், 14,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 7.8 ரிக்டர் அளவிலான முதல் நிலநடுக்கத்தை அடுத்து 50க்கும் மேற்பட்ட அதிர்வுகள் உணரப்பட்டது. இதில், நேற்று மதியம் ஏற்பட்ட இரண்டாவது பெரும் நிலநடுக்கமும் அடங்கும். துருக்கியின் தலைநகரான அங்காராவில் இருந்து ஈராக்கிய குர்திஸ்தான் நகரமான இர்பில் வரை இரண்டாவது அதிர்வு உணரப்பட்டது. இது 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமாக இருந்தது. இதை தொடர்ந்து 6.0 ரிக்டர் அளவில் இன்னொரு பெரிய நிலநடுக்கமும் ஏற்பட்டது.
இரண்டு வாரங்களுக்கு பள்ளிகள் இயங்காது: துருக்கி
துருக்கியில் இடிந்து விழுந்த 5,606 கட்டிடங்களில் குடியிருப்பாளர்கள் நிறைந்த பல மாடி கட்டிடங்களும் அடங்கும். அதே நேரத்தில் சிரியாவும் டஜன் கணக்கான சரிவுகளை அறிவித்துள்ளது. மேலும், அலெப்போவில் உள்ள தொல்பொருள் தளங்களுக்கும் சேதம் ஏற்பட்டிருக்கிறது. சிரியாவில் நேற்று மட்டும் குறைந்தது 1,444 பேர் உயிரிழந்ததாக அரசாங்கமும் மீட்புப் படையினரும் தெரிவித்துள்ளனர். துருக்கியின் புதிய உயிரிழப்பு எண்ணிக்கை 2,379ஆக அதிகரித்துள்ளது. எனவே, இரு நாடுகளிலும் ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகள் குறைந்தது 3,823 ஆகக் இருக்கிறது. பூகம்பத்தால் உயிரிழந்தவர்களுக்கு ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என துருக்கி அறிவித்துள்ளது. நிலநடுக்கம் தொடர்ந்து கொண்டிருப்பதால், துருக்கியில் முன்னெச்சரிக்கையாக இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு வாரங்களுக்கு பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.