அதிபர் தேர்தலில் டிரம்ப் தொடரலாம் என அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
அமெரிக்க அதிபர் தேர்தலில், டொனால்ட் டிரம்ப் தொடரலாம் என அமெரிக்க சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பின் மூலம், கேபிடல் கிளர்ச்சி சம்பந்தப்பட்ட அரசியலமைப்பு விதிகளின் கீழ், கூட்டாட்சி பதவிக்கான வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்வதிலிருந்து மாநிலங்களைத் தடுத்துள்ளது. அதோடு, கொலராடோவின் வாக்குப்பதிவில் இருந்து அவரை விலக்கிய கீழ் நீதிமன்றத்தின் முடிவையும் தற்போது உச்ச நீதிமன்றம் மாற்றியுள்ளது. அமெரிக்க அரசியலமைப்பின் 14வது திருத்தத்தின்படி, மீண்டும் பொதுப் பதவியை வகிக்க டிரம்ப் தகுதியற்றவர் என்றும், மாநிலத்தின் குடியரசுக் கட்சியின் முதன்மை வாக்கெடுப்பில் இருந்து டிரம்ப்பை விலக்க வேண்டும் என்று டிசம்பர் 19 அன்று கொலராடோவின் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் ஒருமனதாக மாற்றினர்.
அதிபர் தேர்தலில் முன்னணியில் உள்ள டிரம்ப்
கடந்த ஜனவரி 6, 2021 அன்று அமெரிக்க தலைநகர் மீதான தாக்குதலைத் தூண்டி ஆதரித்ததற்காக டிரம்ப் தனது ஆதரவாளர்களால் கிளர்ச்சியில் பங்கேற்றதாக கொலராடோ நீதிமன்றம் கண்டறிந்தது. வரவிருக்கும் நவம்பர் 5, 2024, அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் அதிபர் ஜோ பிடனை எதிர்த்து குடியரசுக் கட்சி வேட்பாளராக ட்ரம்ப் முன்னணியில் உள்ளார். அவரது கட்சியின் வேட்புமனுவில் அவருக்கு எஞ்சியிருக்கும் ஒரே போட்டி, முன்னாள் தென் கரோலினா கவர்னர் நிக்கி ஹேலி மட்டுமே. இந்த தீர்ப்பு வெளியானதும்,"அமெரிக்காவிற்கு மகத்தான வெற்றி!!!," என்று டிரம்ப் தனது சமூக ஊடக தளத்தில் பதிவிட்டார்.