டாவோஸ் மாநாடு 2026: காசா அமைதி ஒப்பந்த்தை கையெழுத்திட்டு தொடங்கி வைத்த டொனால்ட் ட்ரம்ப்
செய்தி முன்னோட்டம்
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உயர்மட்ட விழாவில், காசாவில் போர்நிறுத்தம் மற்றும் மறுசீரமைப்பை கண்காணிப்பதற்கான "போர்டு ஆஃப் பீஸ்" (Board of Peace) என்ற புதிய சாசனத்தில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார். இந்த அமைப்பின் தொடக்க தலைவராக தாமே செயல்படப் போவதாகவும் அவர் அறிவித்தார். கையெழுத்து மேசையில் டிரம்புடன் பஹ்ரைன் மற்றும் மொராக்கோவை சேர்ந்த தலைவர்களும் இணைந்தனர், மற்ற தலைவர்கள் ஜோடிகளாக நடந்து வந்து தங்கள் கையொப்பங்களை சேர்த்தனர். விழாவில் அஜர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ் கலந்து கொண்டார்.
எச்சரிக்கை
ஹமாஸிற்கு இறுதி எச்சரிக்கை
இந்த நிகழ்வின் போது ஹமாஸ் அமைப்பிற்கு கடும் எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப், "ஹமாஸ் தனது ஆயுதங்களை ஒப்படைக்க ஒப்புக்கொள்ளாவிட்டால், அவர்கள் முற்றிலும் அழிக்கப்படுவார்கள். அவர்கள் இதற்கு இணங்குகிறார்களா என்பது அடுத்த சில நாட்களில் தெரிந்துவிடும்" என்று குறிப்பிட்டார். ஆயுதக் குறைப்பு என்பது பேச்சுவார்த்தைக்கு அப்பாற்பட்ட ஒன்று என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். வாரியம் முழுமையாக உருவாக்கப்பட்டவுடன், "நாங்கள் என்ன செய்ய விரும்புகிறோமோ அதைச் செய்ய முடியும்" என்று அவர் கூறினார், அதே நேரத்தில் அது ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து செயல்படும் என்று வலியுறுத்தினார்.
தயக்கம்
சர்வதேச ஆதரவும் தயக்கமும்
இந்த அமைப்பில் மொராக்கோ மற்றும் பஹ்ரைன் போன்ற நாடுகள் இணைந்துள்ளன. இருப்பினும், பிரான்ஸ் மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்ற சில ஐரோப்பிய நாடுகள் இந்த அமைப்பில் சேரத் தயக்கம் காட்டி வருகின்றன. குறிப்பாக, ரஷ்யாவின் தலையீடு இருக்கலாம் என்ற அச்சத்தில் பிரிட்டன் இதில் இணையவில்லை. இந்த அமைப்பானது ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து செயல்படும் என்றும், மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட இது ஒரு முக்கியமான வரலாற்றுச் சிறப்புமிக்க படி என்றும் ட்ரம்ப் விவரித்தார். உலகளாவிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தற்போது குறைந்து வருவதாகவும், தனது நிர்வாகத்தின் கீழ் பல போர்கள் முடிவுக்கு வந்துள்ளதாகவும் உரிமை கோரினார்.