
முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸிற்கான ரகசிய சேவை பாதுகாப்பை நீக்கினார் டொனால்ட் டிரம்ப்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸிற்கான ரகசிய சேவைப் பாதுகாப்பை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்துள்ளார். அதிபர் டிரம்பின் இந்த உத்தரவு, முன்னாள் துணை அதிபர்களுக்கு வழங்கப்படும் ஆறு மாதப் பாதுகாப்பு காலத்தைத் தாண்டி கமலா ஹாரிஸிற்கு வழங்கப்பட்ட கூடுதல் பாதுகாப்பு உத்தரவை ரத்து செய்வதாக மூத்த வெள்ளை மாளிகை வட்டாரங்கள் உறுதி செய்தன. இந்த உத்தரவு செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது. இந்த முடிவு கமலா ஹாரிஸிற்கு குறிப்பிடத்தக்க பாதிப்புகளை ஏற்படுத்தும். தனது 107 நாட்கள் என்ற நினைவுக் குறிப்பு புத்தகத்திற்கான தேசிய சுற்றுப்பயணத்தைத் தொடங்க அவர் திட்டமிட்டிருந்த நிலையில் இந்த நடவடிக்கை வந்துள்ளது.
சிக்கல்
பாதுகாப்பு சிக்கல்
அமெரிக்கா கூட்டாட்சிப் பாதுகாப்பு இல்லாத நிலையில், அவர் தனது தனிப்பட்ட பாதுகாப்பை மட்டும் இழப்பதுடன், ரகசிய சேவையால் வழங்கப்படும் முக்கியமான அச்சுறுத்தல் உளவு மற்றும் பாதுகாப்பான குடியிருப்பு வசதிகள் அணுகலையும் இழப்பார். இது சொந்தமாகப் பெரும் செலவில் தனிப்பட்ட பாதுகாப்பை ஏற்பாடு செய்ய வேண்டிய நிலையை அவருக்கு உருவாக்கும். இந்த பாதுகாப்பு விலக்கம், அமெரிக்காவில் நிலவும் தீவிரமான அரசியல் சூழ்நிலையையும், முன்னாள் உயர்மட்ட அதிகாரிகளுக்கு உள்ள பாதுகாப்பு சவால்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசோம் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் காரன் பாஸ் ஆகியோர் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும், கமலா ஹாரிஸிற்கு மாநில அளவில் பாதுகாப்பு அளிப்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.