காவல்துறையில் சரணடைய உள்ளார் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது தேர்தல் மோசடி வழக்கு போடப்பட்டுள்ள நிலையில், அவர் வியாழக்கிழமை அட்லாண்டாவில் சரணடைய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட இருக்கும் டிரம்ப், "நான் வியாழன் அன்று ஜார்ஜியாவின் அட்லாண்டாவுக்குச் சென்று சரணடைகிறேன்" என்று தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளார். மேலும், தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றசாட்டுகளை முற்றிலுமாக மறுத்த அவர், தனது தேர்தல் பிரச்சாரத்தை கெடுக்க சிலர் அரசியல் சதி செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார். வியாழக்கிழமை அட்லாண்டாவில் உள்ள ஃபுல்டன் கவுண்டி சிறையில் சரணடைய டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக சுமத்தப்பட்டிருக்கும் குற்றசாட்டுகள்
2020ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் மோசடி செய்து வெற்றிபெற முயன்றது தொடர்பாக 13 குற்றசாட்டுகள் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது சுமத்தப்பட்டன. கடந்த வாரம், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது 18 கூட்டாளிகளுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. டிரம்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 97 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் அவர் தேர்தல் மோசடி செய்ததாகவும், போலி ஆவணங்களை சமர்பித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அது போக, வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்தது, அதிகாரிகளை மிரட்டி வாக்காளர் மோசடி செய்ய முயன்றது போன்ற குற்றச்சாட்டுகளும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே, மேலும் 3 வழக்குகளில் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.