LOADING...
விலைவாசி உயர்வால் மக்கள் கடும் அவதி; அத்தியாவசிய விவசாயப் பொருட்களுக்கான வரியை ரத்து செய்தார் டிரம்ப்
அமெரிக்காவில் அத்தியாவசிய விவசாயப் பொருட்களுக்கான வரியை ரத்து செய்தார் டிரம்ப்

விலைவாசி உயர்வால் மக்கள் கடும் அவதி; அத்தியாவசிய விவசாயப் பொருட்களுக்கான வரியை ரத்து செய்தார் டிரம்ப்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 15, 2025
05:15 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அத்தியாவசிய விவசாயப் பொருட்களின் இறக்குமதி மீதான வரியைக் குறைக்கும் நிர்வாக ஆணையில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) கையெழுத்திட்டார். அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில் பொருளாதாரக் கவலைகள் முக்கியப் பிரச்சினையாக மாறியதாலும், அதிக விலைவாசி உயர்வால் நுகர்வோர் அழுத்தத்தை உணர்ந்ததாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிர்வாக ஆணையின்படி, காபி, வாழைப்பழம், மாட்டிறைச்சி, பழச்சாறு, தக்காளி, தேங்காய், பழங்கள் உட்படப் பல பொருட்களின் இறக்குமதி மீதான பரஸ்பர வரி (Reciprocal Tariff) நீக்கப்பட்டுள்ளது. இந்த வரியானது 10% முதல் 50% வரை இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வரி குறைப்பு அமெரிக்க நுகர்வோருக்குப் பொருட்களின் விலையைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளக்கம் 

நிதித்துறைச் செயலர் ஸ்காட் பெஸ்ஸன்ட் விளக்கம்

நிதித்துறைச் செயலர் ஸ்காட் பெஸ்ஸன்ட் இது குறித்துப் பேசுகையில், "அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படாத காபி மற்றும் வாழைப்பழம் போன்றப் பொருட்களைக் குறிவைத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார். இருப்பினும், இந்த ஆணை அனைத்து வரிகளையும் முழுமையாக விலக்கவில்லை. உதாரணத்திற்கு, அமெரிக்காவிற்கு முக்கிய விநியோகஸ்தரான மெக்சிகோவிலிருந்து வரும் தக்காளிக்கான 17% வரி தொடரும். இந்த வரி ஜூலை மாதம் நடைமுறைக்கு வந்த பிறகுத் தக்காளியின் விலை உடனடியாக உயர்ந்தது. அதிகரித்து வரும் நுகர்வோர் விலைகளுக்குத் தனது வரிக் கொள்கைகள் காரணமாக இருக்கலாம் என்பதை டிரம்ப் ஒப்புக்கொண்டார். "சில சந்தர்ப்பங்களில் இது இருக்கலாம். ஆனால் பெரும்பாலும், அந்தச் சுமையை மற்ற நாடுகள் தான் தாங்கிக் கொள்கின்றன." என்று அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.