
கல்வித்துறை இனி மாநிலங்கள் வசம்; கூட்டாட்சி கல்வி நிறுவனத்தை கலைக்கும் உத்தரவில் கையெழுத்திடுகிறார் டொனால்ட் டிரம்ப்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க கல்வித் துறையை மூடுவதற்கான நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை (மார்ச் 20) கையெழுத்திட உள்ளார் என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கல்வியில் கூட்டாட்சி அரசின் மேற்பார்வையைக் குறைத்து அதிகாரத்தை மாநில மற்றும் உள்ளூர் அரசாங்கங்களுக்கு மாற்றுவதை நீண்டகாலமாக வலியுறுத்தி வந்த டிரம்ப், தற்போது அதை செயலில் காட்டுவதற்கான நடவடிக்கையை தொடங்கியுள்ளார்.
அமெரிக்காவின் கல்வித் துறையை திறமையற்றது மற்றும் தாராளவாத சித்தாந்தங்களால் பாதிக்கப்படுகிறது என்று டிரம்ப் அடிக்கடி விமர்சித்து வருகிறார்.
கல்விக் கொள்கை கூட்டாட்சி மட்டத்தில் நிர்வகிக்கப்படுவதற்குப் பதிலாக உள்ளூரில் தீர்மானிக்கப்பட வேண்டும் என்று பழமைவாத விமர்சகர்களும் வாதிடுகின்றனர்.
நடைமுறையில் சாத்தியமா?
கூட்டாட்சி கல்வித்துறையை கலைப்பது நடைமுறையில் சாத்தியமா?
டொனால்ட் டிரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டாலும், அமெரிக்க அரசின் கூட்டாட்சி கல்வி நிறுவனத்தை கலைப்பதற்கு காங்கிரஸின் ஒப்புதல் தேவைப்படும்.
ஏனெனில், இது 1979 இல் ஒரு சட்டத்தால் நிறுவப்பட்டது. எனினும், காங்கிரசில் டிரம்ப் பெரும்பான்மை பலத்தை கொண்டுள்ளதால், கலைப்பது சாத்தியம்தான் என நம்பப்படுகிறது.
இதற்கிடையே, அத்தியாவசிய கல்வி சேவைகள் மற்றும் திட்டங்கள் தடையின்றி கிடைப்பதை உறுதிசெய்து, துறையை மூட தேவையான நடவடிக்கைகளை எடுக்க செயலாளர் லிண்டா மெக்மஹோனுக்கு இந்த உத்தரவு வழிகாட்டும் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளார்.
டிரம்ப் நிர்வாகம் ஏற்கனவே பணிநீக்கங்கள் மற்றும் பட்ஜெட் வெட்டுக்கள் மூலம் நிறுவனத்தின் பலத்தை குறைத்து வருவது குறிப்பிடத்தக்கது.