மாறும் உலக அரசியல்: அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க மூன்று நாள் பயணமாக சீனா புறப்பட்டார் டிரம்ப்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பதற்காகத் தனது மூன்று நாள் பயணமாகப் பெய்ஜிங் புறப்பட்டுள்ளார். ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர், உலகளாவிய எண்ணெய் சந்தை சரிவு மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் போர் ஆகியவற்றுக்கு மத்தியில் இந்தச் சந்திப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. மே 13 முதல் மே 15 வரை நடைபெறும் இந்தப் பயணத்தின் போது, வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் இரு நாட்டுத் தலைவர்களும் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளனர். கடந்த 2025 அக்டோபரில் கொரியாவின் புசான் நகரில் நடந்த சந்திப்பிற்குப் பிறகு, ட்ரம்ப் மற்றும் ஜி ஜின்பிங் நேரில் சந்திப்பது இதுவே முதல்முறை.
நிலைப்பாடு
ஈரான் விவகாரத்தில் ட்ரம்ப்பின் இரட்டை நிலைப்பாடு
சீனப் பயணத்திற்கு முன்னதாகச் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ஈரான் போர் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் குறித்துப் பேசும்போது சற்று முரண்பட்ட கருத்துகளைத் தெரிவித்தார். "ஜி ஜின்பிங்குடன் இதைப்பற்றி நீண்ட நேரம் பேசுவோம்" என்று ஒருபுறம் கூறிய அவர், சில நிமிடங்களிலேயே "ஈரான் விவகாரம் எங்களது முழு கட்டுப்பாட்டில் உள்ளது, இதில் எங்களுக்கு யாரிடமும் உதவி தேவையில்லை; நாங்கள் அமைதியாகவோ அல்லது வேறு வழியிலோ வெற்றி பெறுவோம்" என்று அதிரடியாகத் தெரிவித்தார்.
ஒப்பந்தம்
மெகா விமான ஒப்பந்தம் மற்றும் வர்த்தகப் பேச்சுவார்த்தை
இந்த சந்திப்பின் போது அமெரிக்காவின் போயிங் நிறுவனம் மற்றும் சீனா இடையே சுமார் 500 'போயிங் 737 மேக்ஸ்' ரக விமானங்கள் மற்றும் GE என்ஜின் கொண்ட பெரிய ரக விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இது உறுதியானால், விமானப் போக்குவரத்து வரலாற்றிலேயே இது மிகப்பெரிய ஒப்பந்தமாக அமையும். மேலும், அமெரிக்காவிற்குத் தேவையான அரிய வகை தாதுக்கள் விநியோகம் குறித்தும் இரு நாடுகளும் ஆலோசிக்க உள்ளன. ட்ரம்ப்பின் இந்தப் பயணத்தில் டெஸ்லா அதிபர் எலான் மஸ்க், ஆப்பிள் சிஇஓ டிம் குக் மற்றும் போயிங் சிஇஓ கெல்லி ஓர்ட்பெர்க் உள்ளிட்ட அமெரிக்காவின் முன்னணித் தொழில் அதிபர்கள் உடன் சென்றுள்ளனர்.