டைட்டானிக் நினைவு தினம்: தெரிந்ததும் தெரியாததும்
டைட்டானிக் என்றாலே நினைவுக்கு வருவது ஹாலிவுட் திரைப்படம் தான். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15ஆம் தேதி டைட்டானிக் நினைவு தினமாக கொண்டாடப்படுகிறது. 1997ஆம் ஆண்டு வெளியான டைட்டானிக் படத்தை நம்மில் பலர் பார்த்திருப்போம். அது உண்மையாக நடந்த ஒரு கதையின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாகும். உண்மையான டைட்டானிக் கப்பல், தாமஸ் ஆண்ட்ரூஸ் என்பரால் வடிவமைக்கப்பட்டு, ஹார்லாண்ட் மற்றும் வோல்ஃப் ஆகியோரால் கட்டப்பட்டது. முதன்முதலில் இந்த கப்பலை வடிவமைத்தவுடம், இது உலகின் அதிவேகக் கப்பலாக இருக்கும் என்று கருதப்பட்டது. இது அந்தக் காலத்தில் கட்டப்பட்ட மிகப்பெரிய ஆடம்பரமான கப்பல்களில் ஒன்றாகும். 1912ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி, 'RMS டைட்டானிக்' கப்பல் தனது முதல் பயணமாக இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் இருந்து புறப்பட்டது.
பிழைத்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்
ஆனால், ஏப்ரல் 14 ஆம் தேதி நள்ளிரவு, ஒரு பனிப்பாறையில் இருந்து கப்பலின் போக்கைத் திசை திருப்பத் தவறியதால், டைட்டானிக் கப்பலின் 5 கம்பார்ட்மென்டுகள் உடைந்தது. இதனால், கப்பலுக்குள் நுழைந்த கடல் நீர் கப்பலை பாதியாக உடைத்து அதை மூழ்கவும் செய்தது. லைஃப் படகுகளின் பற்றாக்குறை மற்றும் அவசர நடைமுறைகள் இல்லாததால், 1,500க்கும் மேற்பட்ட மக்கள் மூழ்கும் கப்பலில் இருந்து குதித்து உயிரிழந்தனர். மேலும், வட அட்லாண்டிக் கடலில் இருக்கும் உறைபனியால் பலர் உயிரிழந்தனர். தப்பிப்பிழைத்த 700க்கும் மேற்பட்டவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். புகழ்பெற்ற பிரிட்டிஷ் பத்திரிகையாளர் வில்லியம் தாமஸ் ஸ்டெட், ஆஸ்டர் மற்றும் குகன்ஹெய்ம் வாரிசுகள் உட்பட பல குறிப்பிடத்தக்க அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் குடிமக்கள் இதனால் உயிரிழந்தனர்.