இஸ்ரேல்-ஹமாஸ் போர் மத்திய கிழக்கு நாடுகளில் பரவாமல் இருப்பதை உறுதி செய்யும் அரபு நாடுகள்
இஸ்ரேல்-ஹமாஸ் போர் மத்திய கிழக்கில் பரவாமல் தடுக்கும் விஷயத்தில் அரபு நாடுகள் உறுதியாக இருக்கின்றன என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை இஸ்ரேல் சென்ற அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், தற்போது இஸ்ரேலின் அண்டை நாடுகளுக்கு சென்று நிலைமையை மதிப்பீடு செய்தார் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு, அவர் எகிப்தின் கெய்ரோவில் இருந்து அமெரிக்காவிற்கு புறப்படுவதற்கு முன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பல அரபு நாடுகளிடையே போரைப் பரவாமல் தடுக்கும் உறுதிப்பாடு உள்ளது என்று கூறியுள்ளார்.
'அரபு நாடுகள் போரை நடக்கவிடாமல் தடுக்க முயற்சிக்கின்றன': பிளிங்கன்
மத்திய கிழக்கு நாடுகளுக்கு 3 நாள் பயணமாக சென்றிருந்த பிளிங்கன், கத்தார், ஜோர்டான், பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவூதி அரேபியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு சென்று அந்நாட்டு தலைவர்களுடன் இஸ்ரேல்-ஹமாஸ் போர் பற்றி விவாதித்தார். அதன் பின் பேசிய அவர். "நான் சென்ற ஒவ்வொரு நாட்டிலும் இந்த மோதல் பரவும் சூழ்நிலையை தடுப்பதற்கான ஒரு உறுதி உள்ளது. அவர்கள் தங்கள் சொந்த செல்வாக்கைப் பயன்படுத்தி, தங்கள் சொந்த உறவுகளை உறுதி செய்ய இந்த போரை நடக்கவிடாமல் தடுக்க முயற்சிக்கிறார்கள்" என்று பிளிங்கன் கூறியுள்ளார். 10 நாட்களுக்கு முன், ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதை அடுத்து, இஸ்ரேல்-ஹமாஸ் போர் வெடித்தது. இந்த போரில் இதுவரை 4000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.