குறைந்து வரும் உலக பணக்காரர்களின் எண்ணிக்கை: காரணம் என்ன
உலகில் கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட போர், பொருளாதார நெருக்கடி, வங்கிகளின் வீழ்ச்சி, கொரோனா பெரும்தொற்று, தொழில்நுட்பத் துறையின் வீழ்ச்சி போன்றவை உலக பொருளாதாரத்தை பெரிதும் பாதித்திருக்கிறது. இந்த பெரும் பொருளாதார நெருக்கடியால் உலகளாவிய செல்வம் குறைந்துள்ளது என்று 2023 M3M ஹுருன் குளோபல் ரிச் ஹெல்த் கூறியுள்ளது. சில வருடங்களுக்கு முன் இருந்ததை விட தற்போது உலக பணக்காரர்கள் எண்ணிக்கையும் குறைந்திருக்கிறது. இதில் எதிர்பார்க்காத வீழ்ச்சி என்றால் அது தொழில்நுட்பத் துறையின் வீழ்ச்சி தான். நன்றாக இயங்கி கொண்டிருந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் கூட இந்த வீழ்ச்சியினால் பெரிதாக பாதிக்கப்பட்டன. உலக பணக்காரர்களில் சிலர் பில்லியன் கணக்கில் இழப்பை சந்தித்தனர்.
உலக பணக்காரர்களின் எண்ணிக்கை 8% குறைந்துள்ளது
உலகில் தற்போது 3,112 கோடீஸ்வரர்கள் உள்ளனர். இது கடந்த ஆண்டை விட 8% குறைவாகும். அதாவது கடந்த ஆண்டை விட தற்போது 269 பேர் குறைந்துள்ளனர். மேலும், உலக சொத்துக்களில் 10% குறைந்துள்ளது. அதாவது $13.7 டிரில்லியன் மதிப்பிலான செல்வம் குறைந்திருக்கிறது. அமெரிக்காவில் 173 பணக்காரர்களும் சீனாவில் 128 பணக்காரர்களும் தலா 1 பில்லியன் டாலர்களை இழந்துள்ளனர். இந்தியாவில், 41 பில்லியனர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு பில்லியன் டாலர்களை இழந்து வருகின்றனர். 603.7 பில்லியன் டாலர்களை இழந்து, ஒட்டுமொத்த சொத்து இழப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.