LOADING...
"எங்கள் மண்ணில் அமெரிக்க போர் விமானங்கள் நுழைய முடியாது": இலங்கையின் அதிரடி மறுப்பு
அமெரிக்க போர் விமானங்களை நிறுத்த விடுக்கப்பட்ட கோரிக்கையை இலங்கை நிராகரித்துள்ளது

"எங்கள் மண்ணில் அமெரிக்க போர் விமானங்கள் நுழைய முடியாது": இலங்கையின் அதிரடி மறுப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Mar 20, 2026
06:21 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கில் நிலவி வரும் போரில் இலங்கை ஒருபோதும் தனது மண்ணை ராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்த அனுமதிக்காது என அதிபர் அநுர குமார திஸாநாயக்க திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அமெரிக்க போர் விமானங்களை மத்தள சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்த விடுக்கப்பட்ட கோரிக்கையை இலங்கை நிராகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அதிபர், "ஜிபூட்டியிலிருந்து ஏவுகணைகள் பொருத்தப்பட்ட இரண்டு போர் விமானங்களை மத்தள விமான நிலையத்தில் மார்ச் 4 முதல் 8 வரை நிறுத்த அமெரிக்கா அனுமதி கோரியது. ஆனால், பிப்ரவரி 26 அன்றே நாங்கள் அதை நிராகரித்துவிட்டோம். எந்தவொரு தரப்பிற்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ எமது நிலப்பரப்பு பயன்படுத்தப்படுவதை நாங்கள் விரும்பவில்லை," என்று கூறினார்.

மீட்பு

ஈரான் கப்பல்கள் மீட்பு

இலங்கை கடற்பரப்புக்கு அருகே அமெரிக்க நீர்மூழ்கி கப்பலால் ஈரானின் 'ஐரிஸ் தேனா' கப்பல் தாக்கப்பட்டபோது, உயிருக்குப்போராடிய 32 ஈரானிய வீரர்களை இலங்கை கடற்படை மீட்டதையும், உயிரிழந்த 84 பேரின் உடல்களை மீட்டதையும் அதிபர் சுட்டிக்காட்டினார். மேலும், 219 வீரர்களுடன் வந்த 'ஐரிஸ் புஷெர்' கப்பலுக்கு மனிதாபிமான அடிப்படையில் கொழும்புவில் அடைக்கலம் அளிக்கப்பட்டதையும் அவர் உறுதிப்படுத்தினார். அமெரிக்கா இலங்கையின் முக்கிய ஏற்றுமதி சந்தையாகவும், ஈரான் இலங்கை தேயிலையின் முக்கிய வாங்குபவராகவும் உள்ளன. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஈரானுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தைப் புறக்கணித்ததன் மூலம் தனது நடுநிலையை இலங்கை நிரூபித்துள்ளதாக அநுர கூறினார். "நாங்கள் எவருக்கும் அடிபணிய மாட்டோம்; நீதியின் பக்கமே நிற்போம்" என்ற அதிபரின் உரைக்கு நாடாளுமன்றத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

Advertisement