Loading...
67 பேர் பலி, ஷெங்கன் அமைப்பிலிருந்து ஸ்பெயினை நீக்க கோரிக்கை! மொராக்கோ எல்லையில் தீவிரமடையும் அகதிகள் பிரச்சனை
ஸ்பெயின் - மொராக்கோ எல்லை சிக்கலில் 67 புலம்பெயர்ந்தோர் பலி

67 பேர் பலி, ஷெங்கன் அமைப்பிலிருந்து ஸ்பெயினை நீக்க கோரிக்கை! மொராக்கோ எல்லையில் தீவிரமடையும் அகதிகள் பிரச்சனை

எழுதியவர் Sekar Chinnappan
Aug 02, 2026
10:02 am

செய்தி முன்னோட்டம்

வட ஆப்பிரிக்கப் பகுதியில் உள்ள ஸ்பெயின் நாட்டின் சுயாட்சி நகரமான சியூட்டாவில் மொராக்கோ எல்லையைக் கடந்து ஒரே நேரத்தில் 50,000 முதல் 60,000 வரையிலான புலம்பெயர்ந்தோர் ஊடுருவ முயன்ற சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடல் வழியிலும், தடுப்பு சுவர்களைத் தாண்டியும் தப்பி வர முயன்ற போது ஏற்பட்ட நெரிசல் மற்றும் நீரில் மூழ்கி இதுவரை 67 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளதாக ஸ்பெயின் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்த ஸ்பெயின் அரசு 500 மீட்டர் நீளமுள்ள மிதக்கும் கடல்தடுப்பு சுவர்களை அமைக்கும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

நீக்கக் கோரிக்கை

ஷெங்கன் அமைப்பிலிருந்து ஸ்பெயினை நீக்கக் கோரிக்கை

இந்த மாபெரும் அகதிகள் ஊடுருவலைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளிடையே கடுமையான அரசியல் கருத்து வேறுபாடுகளும் பதற்றமும் வெடித்துள்ளன.

இத்தாலி உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள், ஸ்பெயின் தனது எல்லைகளைச் சரியாகப் பாதுகாக்கத் தவறிவிட்டதாகக் கூறி, அதை ஐரோப்பிய நாடுகளுக்கான எல்லையற்ற ஷெங்கன் மண்டலத்திலிருந்து தற்காலிகமாக நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி, ஸ்பெயினுடனான ஷெங்கன் ஒப்பந்தப் பங்கேற்பை நிறுத்தி வைப்பதாகவும், ஸ்பெயினில் இருந்து வரும் பயணிகளுக்கு மீண்டும் எல்லைக் கட்டுப்பாடுகளை விதிக்கப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

கண்டனம்

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் கண்டனம்

இந்த விவகாரத்தில் ஸ்பெயின் செயல்பட்ட விதத்தை நியாயப்படுத்திப் பேசிய பிரதமர் பெட்ரோ சான்செஸ், ஷெங்கன் அமைப்பில் இருந்து ஸ்பெயினை நீக்கக் கோருவது பொய் செய்திகள், அறியாமை மற்றும் சுயநல அரசியல் விருப்பங்களால் தூண்டப்பட்ட தவறான நடவடிக்கை எனக் கடுமையாக சாடியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைகளைப் பாதுகாப்பது அனைத்து உறுப்பு நாடுகளின் கூட்டுப் பொறுப்பாகும் என்றும், இது குறித்து விவாதிக்க ஐரோப்பிய ஒன்றிய உள்துறை அமைச்சர்களின் அவசரக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

ADVERTISEMENT

மொராக்கோ நிலைப்பாடு

மொராக்கோவின் நிலைப்பாடு மற்றும் அகதிகள் திரும்புதல்

எல்லைப் பாதுகாப்பில் மொராக்கோ அரசு ஸ்பெயினுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி வருவதாகவும், 24 மணி நேரத்திற்குள் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர மொராக்கோவின் கூட்டு நடவடிக்கை உதவியாக இருந்ததாகவும் ஸ்பெயின் உள்துறை அமைச்சர் பெர்னாண்டோ கிராண்டே-மர்லாஸ்கா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, சியூட்டாவிற்குள் நுழைந்த புலம்பெயர்ந்தோரில் பெரும்பாலானோர் போதிய உணவு மற்றும் தங்குமிடம் இல்லாததாலும், ராணுவத்தின் தீவிரக் கட்டுப்பாடுகள் காரணமாகவும் மீண்டும் மொராக்கோவிற்கே தங்களது சுய விருப்பத்தின் பேரில் திரும்பி சென்று கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT