இருதரப்பு உறவுகளை புதுப்பிக்க இந்தியா வரவில்லை: பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்
கோவாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(SCO) வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி அடுத்த மாதம் இந்தியா வருவார் என்ற தகவல் நேற்று(ஏப் 20) வெளியாகியது. இந்நிலையில், இது குறித்து அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி கருத்து தெரிவித்துள்ளார்.இந்தியாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் தான் பங்கேற்பது, SCO சாசனத்தின் மீதிதான பாகிஸ்தானின் அர்ப்பணிப்பை மட்டுமே பிரதிபலிக்கிறது என்றும், இந்த வருகையை இந்தியாவுடனான இருதரப்பு உறவுகளின் அடிப்படையில் பார்க்கப்படக்கூடாது என்றும் அமைச்சர் பிலாவல் கூறியுள்ளார்.
12 வருட இடைவெளிக்குப் பிறகு இந்தியா வரும் முதல் வெளியுறவுத்துறை அமைச்சர்
நேற்று ஒளிபரப்பான துன்யா நியூஸ் நிகழ்ச்சியின் கேள்விக்கு பதிலளித்த அவர், அடுத்த மாதம் கோவாவில் நடைபெறவுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் பாகிஸ்தான் சார்பில் கலந்துகொள்ள இருப்பதாக தெரிவித்தார். "SCO சாசனத்திற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இந்த பயணம் இருதரப்பு உறவுகளுக்கானதாக பார்க்கப்படாமல் SCOவின் சூழலில் பார்க்கப்பட வேண்டும்." என்று பிலாவல் பூட்டோ கூறியுள்ளார். மே 4-5 தேதிகளில் கோவாவில் நடைபெற உள்ள SCO வெளியுறவுத்துறை அமைச்சர்கள்(CFM) கூட்டத்தில், பூட்டோ-சர்தாரி பாகிஸ்தான் தூதரகத்தை வழிநடத்துவார் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுமார் 12 வருட இடைவெளிக்குப் பிறகு இந்தியா வரும் முதல் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ ஆவார். 2011ஆம் ஆண்டு அப்போதைய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர் இந்தியா வந்திருந்தார்.