மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்; ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு
செய்தி முன்னோட்டம்
பங்களாதேஷில் கடந்த ஜூலை 2024 மாணவர் போராட்டத்தின் போது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், பதவியில் இருந்து நீக்கப்பட்டப் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது இரண்டு மூத்த உதவியாளர்களுக்கு எதிரானத் தீர்ப்பை சர்வதேசக் குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) இன்று வழங்கியது. இந்த வழக்கில் முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுசமான் கான் கமல் மற்றும் முன்னாள் காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் சௌத்ரி அப்துல்லா அல்-மமுன் ஆகியோரும் குற்றம் சாட்டப்பட்டனர். நீதிபதி எம்.டி.குலாம் மோர்த்துசா மஜும்தர் தலைமையிலான மூன்று பேர் கொண்டத் தீர்ப்பாயம், 453 பக்கங்கள் கொண்டத் தீர்ப்பின் முக்கியப் பகுதிகளை வாசித்தது. இதில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தீர்ப்பாயம்
தீர்ப்பாயம் அளித்த முக்கியத் தகவல்கள்
ICT நீதிபதி வெளியிட்ட தகவல்களின்படி, ஜூலை-ஆகஸ்ட் 2024 போராட்டங்களின் போது சுமார் 1,400 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 24,000 பேர் காயமடைந்தனர். மேலும், போராட்டக்காரர்களை ஒடுக்க ஷேக் ஹசீனாவின் அரசாங்கம் துப்பாக்கிகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உட்படக் கொடிய ஆயுதங்களைப் பயன்படுத்த உத்தரவிட்டதாகவும், இது பரவலான வன்முறைக்கு வழிவகுத்ததாகவும் நீதிபதி குறிப்பிட்டார். ஷேக் ஹசீனா தெற்கு டாக்கா முன்னாள் மேயருடன் பேசியதாகக் கூறப்படும் உரையாடலின் ஒரு பகுதியை வாசித்த நீதிபதி, அவர் போராட்டக்காரர்களைக் கொல்ல ஹெலிகாப்டர்கள் மற்றும் கொடிய ஆயுதங்களைப் பயன்படுத்த உத்தரவிட்டதாகத் தெரிவித்தார்.
வன்முறை
ஷேக் ஹசீனா வன்முறையை தூண்டியதாக குற்றச்சாட்டு
ஷேக் ஹசீனா வன்முறையைத் தூண்டினார் என்றும், ராசக்கார் என்ற கருத்தைப் பயன்படுத்தி மக்களை அரசின் எதிரிகள் என்று முத்திரை குத்தினார் என்றும் ICT நீதிபதி குறிப்பிட்டார். பங்களாதேஷ் நீதிமன்றம், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்ததாகத் தீர்ப்பளித்ததுடன், அவருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் போதுமான காரணங்கள் உள்ளன என்றும் கூறியது. இதற்காக, ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுசமான் கான் கமலுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் அரசு தரப்பு சாட்சியாக மாறிய முன்னாள் காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் சௌத்ரி அப்துல்லா அல்-மமுன் மரண தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டு, ஐந்து வருட சிறை தண்டை விதிக்கப்பட்டது.