சிட்னியில் மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம்; தேவாலயத்தில் கத்தி குத்து, பலர் காயம்
ஆஸ்திரேலியாவின் சிட்னி வெஸ்டில் அமைந்துள்ள வேக்லியில் உள்ள தேவாலயத்தில் ஒரு பிரசங்கத்தின் போது தேவாலயத்தின் பிஷப் மற்றும் பலர் கத்தியால் குத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம், திங்கள் மாலை நடைபெற்றதாக சிட்னி காவல்துறையினர் உறுதிப்படுத்தியதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. இதில் மேலும் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், இந்த பிரசங்கம் லைவ் ஸ்ட்ரீம் செய்யப்பட்டிருந்த நேரத்தில் இந்த கத்தி குத்தும் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலை பலர் நேரலையில் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். தாக்குதலுக்கான காரணத்தை அறிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், காவல்துறையினர் தற்போது அவரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் அனைவரும் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிட்னியில் தொடரும் மனித தாக்குதல்கள்
ஆன்லைனில் பரவும் காணொளிகளில், ஒரு நபர் பிரசங்கம் செய்துகொண்டிருந்த பிஷப்பை நோக்கி நிதானமாக நடந்து சென்று, அவரை கையில் இருந்த ஒரு ஆயுதத்தால் தொடர்ந்து குத்துவது காட்சிப்படுப்படுத்தப்பட்டுள்ளது. உடனே சம்பவ இடத்தில் இருந்த வழிபாட்டாளர்கள் பிஷப்பைக் காப்பாற்றும் முயற்சியில் தாக்குதல் நடத்தியவரை நோக்கி விரைந்தனர். அதனை தொடர்ந்து, வழிபாட்டாளர்களை அந்த நபர் கத்தியால் குத்தத் தொடங்குகிறார். காயமடைந்த நபர்கள், உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு ஆளாகாத போதிலும், மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர் என்று போலீசார் தெரிவித்தனர். முன்னதாக 3 நாட்களுக்கு முன்னர் சிட்னியின் போண்டி பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் கத்திக்குத்துத் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.