ஹஜ் பயணத்திற்கு போடப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கம்
இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைகளுக்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என்று சவூதி அமைச்சர் ஒருவர் நேற்று(ஜன:9) தெரிவித்திருக்கிறார். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மூன்று வருடங்களாக ஹஜ் யாத்திரைகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு இது போன்ற கட்டுப்பாடுகள் எதுவும் இருக்காது என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் தவ்பிக் அல்-ரபியா ரியாத்தில் செய்தியாளர்களிடம், "யாத்ரீகர்களின் எண்ணிக்கை தொற்றுநோய்க்கு முன்பு இருந்த நிலைக்கு மாறும். எனவே வயது வரம்புகள் எதுவும் இருக்காது" என்று தெரிவித்திருக்கிறார்.
கொரோனாவுக்கு முன், கொரோனாவுக்கு பின்
புனித யாத்திரை இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஒன்றாகும். இந்த யாத்திரையை இஸ்லாமியர்கள் அனைவரும் ஒரு முறையாவது செய்ய வேண்டும். கடந்த 2019ஆம் ஆண்டு, கொரோனாவுக்கு முன், கிட்டத்தட்ட 2.5 மில்லியன் மக்கள் ஹஜ் யாத்திரையில் கலந்துகொண்டனர். ஆனால், கொரோனாவுக்கு பின் இதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால், 2022ஆம் ஆண்டில் 900,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இதில் 780,000 பேர் வெளிநாட்டு வாசிகள். மேலும், ஹஜ் யாத்திரீகர்கள் கண்டிப்பாக 65 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்றும் கொரோனா தடுப்பூசிகள் போட்டிருக்க வேண்டும் என்றும் இதற்கு முன் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. அது தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.