பாகிஸ்தானுக்கு சர்வதேச அளவில் அவமானம்: 56,000 பிச்சைக்காரர்களை திருப்பி அனுப்பிய சவுதி அரேபியா
செய்தி முன்னோட்டம்
வெளிநாடுகளுக்கு சென்று பிச்சை எடுக்கும் பாகிஸ்தானியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து, சவுதி அரேபியா ஒரே நேரத்தில் 56,000 பாகிஸ்தானியர்களை நாடு கடத்தியுள்ளது. இந்தியா டுடே வெளியிட்டுள்ள செய்தியின்படி, பிச்சை எடுக்கும் நோக்கில் வெளிநாடு செல்ல முயன்ற 6,000-க்கும் மேற்பட்டோரை பாகிஸ்தான் அதிகாரிகளே விமான நிலையங்களில் தடுத்து நிறுத்தியுள்ளனர். புனிதப் பயணம் (உம்ரா) என்ற பெயரில் சவுதி அரேபியாவுக்கு சென்று மெக்கா மற்றும் மதினா நகரங்களில் பிச்சை எடுக்கும் பாகிஸ்தானியர்கள் மீது சவுதி அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபட்ட 56,000 பேர் தற்போது பாகிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
விவரங்கள்
பாகிஸ்தானே வெளிட்ட தகவல்
மத்திய கிழக்கு நாடுகளில் பிச்சை எடுப்பவர்களில் 90 சதவீதம் பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் சவுதி, ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் ஈராக் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது. பிச்சை எடுப்பதற்காக திட்டமிட்டு வெளிநாடு செல்ல முயன்ற 'பிச்சைக்கார கும்பல்களை' சேர்ந்த 66,154 பேரை, பாகிஸ்தானின் ஃபெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி (FIA) இந்த ஆண்டு (2025) விமான நிலையங்களில் வைத்துத் தடுத்துள்ளது.
பாதிப்புகள்
UAE விதித்துள்ள கட்டுப்பாடுகள்
பிச்சைக்காரர்களின் அத்துமீறலால், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்குவதில் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பிச்சை எடுப்பதையே ஒரு தொழிலாகக் கொண்டு வெளிநாடுகளுக்கு கும்பலாக செல்வது பாகிஸ்தானின் சர்வதேச நற்பெயரை வெகுவாகப் பாதித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால் முறையாக வேலை தேடிச் செல்பவர்கள், மாணவர்கள் மற்றும் உண்மையான புனிதப் பயணிகள் விசா பெற முடியாமல் தவித்து வருகின்றனர். "விசா விதிகளை மீறி வெளிநாடுகளில் பிச்சை எடுக்கும் கும்பல்களை கட்டுப்படுத்தத் தவறினால், எதிர்காலத்தில் பாகிஸ்தானியர்களுக்குப் பல நாடுகள் முழுமையாக விசா தடையை விதிக்க வாய்ப்புள்ளது" என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.