சவுதி அரேபியாவில் கோர விபத்து: இந்திய ஹஜ் பயணிகளின் பஸ் - டேங்கர் மோதல்; 42 பேர் பலி
செய்தி முன்னோட்டம்
சவுதி அரேபியாவில் மெக்காவிலிருந்து மதீனாவுக்கு சென்று கொண்டிருந்த இந்திய உமரா யாத்ரீகர்கள் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில், 42 இந்தியப் பயணிகள்பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. பலியானவர்களில் பலர் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. மதீனா நோக்கி சென்றுகொண்டிருந்த இந்த யாத்ரீகர்கள் பேருந்து ஒரு டீசல் டேங்கர் லாரியுடன் மோதியதாக முந்தைய தகவல்கள் தெரிவித்தன. விபத்தில் பலியானோர் எண்ணிக்கை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகாத நிலையில், உள்ளூர் ஊடக அறிக்கைகள் பலியானோர் எண்ணிக்கை 42-க்கும் அதிகமாக இருக்கலாம் என்று அஞ்சுகின்றன. ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினர் அசதுதீன் ஒவைசி இந்தச் சம்பவம் குறித்து வேதனை தெரிவித்ததோடு, ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தின் துணைத் தூதர் அபு மாதன் ஜார்ஜ் என்பவருடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.
நடவடிக்கை
இந்திய அரசின் உடனடி நடவடிக்கை
தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி இந்தச் சம்பவம் குறித்து அறிந்தவுடன், வெளியுறவுத்துறை அமைச்சகத்துடனும் (MEA) சவுதி தூதரகத்துடனும் ஒருங்கிணைந்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவவும், விவரங்களைச் சேகரிக்கவும் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோருக்கு உத்தரவிட்டார். விபத்து குறித்த விவரங்களை அறியும் உறவினர்களுக்காக, தெலங்கானா தலைமைச் செயலகத்தில் 79979 59754 மற்றும் 99129 19545 என்ற உதவி எண்களுடன் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்களை இந்தியாவுக்கு உடனடியாகக் கொண்டு வரவும், காயமடைந்தவர்களுக்குச் சிறந்த மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதிப்படுத்தவும் அவர் ஒன்றிய அரசை வலியுறுத்தினார்.