Loading...
ரஷ்யா - உக்ரைன் இடையே தீவிரமடையும் ட்ரோன் தாக்குதல்: சிறுவர்கள் உட்பட 15 பேர் பலி!
ரஷ்யா - உக்ரைன் இடையே தீவிர ட்ரோன் தாக்குதல்

ரஷ்யா - உக்ரைன் இடையே தீவிரமடையும் ட்ரோன் தாக்குதல்: சிறுவர்கள் உட்பட 15 பேர் பலி!

எழுதியவர் Sekar Chinnappan
Jul 26, 2026
11:43 am

செய்தி முன்னோட்டம்

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே தொடர்ந்து நடைபெற்று வரும் போரில், இரு நாடுகளும் பரஸ்பரம் நடத்திய தீவிர ட்ரோன் தாக்குதல்களில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். உக்ரைனின் ஜபோரிஜியா பிராந்தியத்தில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிலோவ்கா ரிசார்ட் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். இதில் 5 குழந்தைகள் பலியானதாகவும், 19 பேர் படுகாயமடைந்ததாகவும் ரஷ்ய நிர்வாகி யெவ்கெனி பாலிட்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைன் பொதுமக்களை வேண்டுமென்றே இலக்கு வைத்துத் தாக்குவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஊழியர்கள்

கூரியர் நிறுவன ஊழியர்கள் 3 பேர் பரிதாப பலி

மற்றொரு தாக்குதலில், உக்ரைனின் சுமி பகுதியில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 'நோவா போஷ்டா' என்ற பிரபல கூரியர் நிறுவனத்தைச் சேர்ந்த 3 ஓட்டுநர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் அங்கிருந்த கட்டிடமும் தீப்பிடித்து எரிந்தது. இது பொதுமக்கள் பயன்படுத்தும் வணிக வளாகம் என உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.

ஆனால், அந்த இடம் உக்ரைன் ராணுவத்தின் ட்ரோன் சேமிப்பு மற்றும் ஏவுதளமாகப் பயன்படுத்தப்பட்டு வந்ததால் மட்டுமே தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரோமேனியா வான்வெளி

ரோமேனியா வான்வெளியில் நுழைந்த ட்ரோன் சுட்டு வீழ்த்தல்

உக்ரைன் எல்லையை ஒட்டியுள்ள நேட்டோ அமைப்பின் உறுப்பினரான ரோமேனியா நாட்டின் வான்வெளியில் அத்துமீறி நுழைந்த ட்ரோன் ஒன்றை, அந்நாட்டின் எஃப்-16 போர் விமானம் மூலம் அதன் விமானி பாதுகாப்பாக சுட்டு வீழ்த்தியதாக ரோமேனியா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதங்களில் கருங்கடல் துறைமுகம் மற்றும் குடியிருப்புகள் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடந்த நிலையில், தொடர்ந்து தங்கள் எல்லைக்குள் ட்ரோன்கள் ஊடுருவி வருவதாக ரோமேனியா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.

ADVERTISEMENT

தாக்குதல் எச்சரிக்கை

ரஷ்யாவின் பேரழிவுத் தாக்குதல் எச்சரிக்கையும் அமைதிப் பேச்சும்

ரஷ்யா விரைவில் மிகப்பெரிய அளவிலான பேரழிவுத் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஸெலென்ஸ்கி உளவுத்துறை அறிக்கையைச் மேற்கோள் காட்டி எச்சரித்துள்ளார்.

இதனிடையே, உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி விரைவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்துப் பேசவுள்ளார்.

அதேவேளையில், கஜகஸ்தான் அதிபர் தோகாயேவ், இரு தரப்பும் போரை உடனடியாக நிறுத்திவிட்டு பழைய இஸ்தான்புல் பேச்சுவார்த்தை முறையின் அடிப்படையில் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

தொடர் தாக்குதல்

அதிகரிக்கும் பொதுமக்கள் உயிரிழப்புகள் மற்றும் தொடர் தாக்குதல்கள்

கோடைகாலத்தில் போர் தீவிரமடைந்துள்ளதால் பொதுமக்கள் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

சமீபத்தில் ஜபோரிஜியாவில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் பலர் காயமடைந்தனர்.

மேலும், கியிவ் அருகே பாதுகாப்புத் துறை சார்ந்த நிகழ்ச்சி நடைபெற்ற இடம் மீது நடத்தப்பட்ட மற்றொரு கொடூரத் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர் மற்றும் 100 பேர் வரை படுகாயமடைந்தனர்.

இருப்பினும் இரு நாடுகளும் பொதுமக்கள் மீது வேண்டுமென்றே தாக்குதல் நடத்தவில்லை என்றே தொடர்ந்து மறுத்து வருகின்றன.

ADVERTISEMENT