ரஷ்யா, உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து மிகப்பெரிய கைதிகள் பரிமாற்றம் அறிவிப்பு
ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகள் தலா 200 சிறைபிடிக்கப்பட்ட வீரர்களை பரிமாற்றம் செய்து கொண்டதாக புதன்கிழமை தெரிவித்துள்ள நிலையில், போர் தொடங்கியதற்கு பின்னர் மிகப்பெரிய கைதிகள் பரிமாற்றமாக இதை அதிகாரிகள் விவரித்துள்ளனர். பிப்ரவரி 2022ல் போர் தொடங்கியதற்கு பின்னர் இரு நாடுகளும் டஜனுக்கும் மேற்பட்ட முறை கைதிகள் பரிமாற்றத்தை செய்து கொண்ட நிலையில், கடந்தாண்டு பிற்பகுதியில் இந்த பரிமாற்றம் நிறுத்தப்பட்டது. இவ்விரு நாடுகளும் அடுத்தடுத்து வெளியிட்ட அறிக்கைகளில், ஐக்கிய அரபு அமீரகத்தின் மத்தியஸ்த்தில் 200க்கும் மேற்பட்ட சிறைபிடிக்கப்பட்ட வீரர்கள், பரிமாறி கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஏறக்குறைய ஐந்து மாதங்களில் இரு தரப்பினரும் எந்த பரிமாற்றத்தை அறிவிக்கவில்லை. இது அரசியல் காரணங்களுக்காக மாஸ்கோ வேண்டுமென்றே ஒப்பந்தங்களைத் தடுப்பதாகக் கீவ் குற்றம் சாட்டுவதற்கு காரணமானது.
அதிகரித்த மோதல்களுக்கு மத்தியில் நிகழ்ந்த கைதிகள் பரிமாற்றம்
248 வீரர்கள் திரும்ப வந்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அவர்களுக்கு வேண்டிய மருத்துவ மற்றும் உளவியல் உதவிகளையும் வழங்கி வருவதாக கூறியுள்ளது. இந்த வீரர்கள் பரிமாற்றம் ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுடனான, அதன் "வலுவான நட்புறவை" பிரதிபலிப்பதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கூறியது. இருப்பினும் இரு நாடுகளும், எவ்வளவு வீரர்களை இன்னும் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர் என்ற தகவல்களை வெளியிடவில்லை. கைதிகள் பரிமாற்றம், கடந்த ஐந்து நாட்களாக இரு நாடுகளுக்கு இடையே அதிகரித்துள்ள மோதல்களுக்கு மத்தியில் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய ரஷ்ய தாக்குதலில் உக்ரைன் எல்லை பகுதியில் மூவர் கொல்லப்பட்ட நிலையில், குறைந்தது ஒருவர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.