சைலண்டாக டிரம்ப் செய்த வேலை; 28 அம்ச ரஷ்யா - உக்ரைன் அமைதி திட்டத்திற்கு ஒப்புதல்
செய்தி முன்னோட்டம்
நீண்ட காலமாக தொடர்ந்து வரும் ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இறங்கியுள்ளார். இதற்காக அவர் 28 அம்சங்கள் கொண்ட அமைதி திட்டத்திற்கு ரகசியமாக ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளதன்படி, கடந்த சில வாரங்களாக அமெரிக்க உயர் அதிகாரிகள், ரஷ்யத் தூதர் கிரில் டிமிட்ரிவ் மற்றும் உக்ரைன் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து இந்தத் திட்டத்தை உருவாக்கியுள்ளனர். இந்த அமைதித் திட்டம் இன்னும் உக்ரைன் தலைவர்களிடம் அதிகாரப்பூர்வமாக வழங்கப்படவில்லை. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
ஒப்புதல்
இரு நாட்டின் ஒப்புதலுக்கு காத்திருக்கும் அமைதி திட்டம்
இதற்கிடையில், ராணுவ உத்திகள் குறித்து விவாதிக்கவும், தடைபட்டுள்ள அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் உயிர்ப்பிக்கவும் அமெரிக்கக் குழு ஒன்று உக்ரைன் தலைநகர் கீவ் (Kyiv) சென்றுள்ளது. அமெரிக்காவின் இந்த திட்டம் டொனால்ட் டிரம்பின் 20 அம்ச காசா அமைதித் திட்டத்திலிருந்து உத்வேகம் பெற்றது என்று அது கூறியது. NBC அறிக்கையின் படி, அமைதித் திட்ட ஒப்புதல் இரு நாடுகளிடையே பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது என்று டிரம்ப் நிர்வாகத்தின் அதிகாரி குறிப்பிட்டார். கடந்த 2022 பிப்ரவரியில் தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் போர், ஐரோப்பாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவர டிரம்ப் எடுத்துள்ள இந்த முயற்சி உலக அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.