உக்ரைனில் இருக்கும் வீரர்கள் மற்றும் ஆயுதங்களை அமெரிக்கா திரும்பப் பெற வேண்டும்: ரஷ்யா
ரஷ்யாவின் வெளியுறவுதுறை அமைச்சகம் இன்று(பிப் 21) அமெரிக்க தூதர் லின் ட்ரேசியை வரவழைத்து, உக்ரைனில் இருந்து "வீரர்கள் மற்றும் ஆயுதங்களை" அமெரிக்கா திரும்பப் பெற வேண்டும் என்று கோரியுள்ளது. " பிரச்சனையை தணிப்பதற்காக, அமெரிக்க-நேட்டோ வீரர்கள் மற்றும் ஆயுதங்களை திரும்பப் பெறுவதை உறுதிசெய்ய வாஷிங்டன் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அதன் ரஷ்ய-விரோத நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்" என்று ரஷ்யாவின் வெளியுறவுதுறை அமைச்சகம் கூறியுள்ளது. உக்ரைன்-ரஷ்ய போர் ஆரம்பித்து 1 வருடம் முடிய போகிறது. அதே வேளையில், நேற்று(பிப் 20), அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு ஒரு திடீர் பயணத்தை மேற்கொண்டார். அப்போது, ரஷ்ய-உக்ரைன் போருக்கு ஆயுத விநியோகத்தை அதிகரிப்பதாக ஜோ பைடன் உறுதியளித்திருந்தார்.
ரஷ்யாவை விரட்டி அடிப்போம்: உக்ரைன்
இதற்கிடையில், போர் நடவடிக்கைகள் குறித்து பல முடிவுகளை இன்று எடுத்திருக்கும் ரஷ்யா, அமெரிக்காவுடனான அணு ஆயுத குறைப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறது. இதை அதிபர் விளாடிமிர்-புதின் தேசத்தின் உரையை நிகழ்த்திய போது குறிப்பிட்டார். மேலும், தற்போது "வீரர்கள் மற்றும் ஆயுதங்களை" அமெரிக்கா திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையையும் ரஷ்யா விடுத்துள்ளது. இந்நிலையில், ரஷ்யாவை தங்கள் நாட்டை விட்டு "விரட்டி அடிப்போம்" என்றும் ரஷ்யாவுக்கு "தண்டனை வழங்குவோம்" என்றும் உக்ரைன் உறுதி கொண்டுள்ளது. அவர்கள் உண்மையில் எந்த வழியும் இல்லாத ஒரு "முட்டுச்சந்தில் நிற்கிறார்கள்" என்று உக்ரைன் அதிபரின் தலைமைப் பணியாளர் ஆன்ட்ரி யெர்மக் டெலிகிராமில் கூறியுள்ளார்.