உலகமே போற்றும் இந்திய ஆசிரியை; ஒரு மில்லியன் டாலர் குளோபல் டீச்சர் விருதை வென்றார் ரூபல் நாகி
செய்தி முன்னோட்டம்
துபாயில் நடைபெற்ற உலக அரசாங்க உச்சி மாநாட்டின் போது, இந்திய ஆசிரியை ரூபல் நாகிக்கு குளோபல் டீச்சர் விருது 2026 (Global Teacher Prize) வழங்கப்பட்டது. கல்வியில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் இந்த உயரிய விருதுடன், ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 8.3 கோடி ரூபாய்) பரிசுத் தொகையும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த விருதைப் பெறும் 10 வது ஆசிரியர் இவராவார்.
கற்றல் மையங்கள்
800 க்கும் மேற்பட்ட கற்றல் மையங்கள்
ரூபல் நாகி தனது ரூபல் நாகி கலை அறக்கட்டளை மூலம் இந்தியா முழுவதும் 800 க்கும் மேற்பட்ட கற்றல் மையங்களை நிறுவியுள்ளார். பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளுக்கு முறையான கல்வியை வழங்குவதும், பள்ளி செல்லும் குழந்தைகளுக்குக் கூடுதல் பயிற்சியளிப்பதும் இந்த மையங்களின் நோக்கமாகும். அறிவியல், கணிதம் மற்றும் வரலாறு போன்ற பாடங்களைச் சுவர் ஓவியங்கள் மூலம் குழந்தைகளுக்கு எளிமையாகக் கற்பிக்கும் புதிய முயற்சியையும் இவர் மேற்கொண்டு வருகிறார்.
அர்ப்பணிப்பு
24 ஆண்டுகால அர்ப்பணிப்பு
விருதைப் பெற்ற பிறகு பேசிய ரூபல் நாகி, "இந்த விருது எனக்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளது. 24 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 30 குழந்தைகளுடன் ஒரு சிறிய பட்டறையில் எனது பணியைத் தொடங்கினேன். இன்று 10 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளை எனது முயற்சி சென்றடைந்துள்ளது" என்று உருக்கமாகத் தெரிவித்தார். ஒவ்வொரு குழந்தையும் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்ற தனது சிறுவயது கனவை நனவாக்குவது மிகுந்த மனநிறைவைத் தருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பரிசுத் தொகை
பரிசுத் தொகையின் எதிர்காலத் திட்டம்
ரூபல் நாகியின் இந்தச் சாதனையைப் பாராட்டியுள்ள வார்கே அறக்கட்டளை நிறுவனர் சன்னி வார்கே, மிகவும் பின்தங்கிய சமூகங்களுக்குக் கல்வியைக் கொண்டு செல்வதன் மூலம் ரூபல் நாகி சமூகத்தை வலுப்படுத்தியுள்ளார் என்று புகழாரம் சூட்டியுள்ளார். தனக்குக் கிடைத்துள்ள ஒரு மில்லியன் டாலர் பரிசுத் தொகையை வைத்து, ஏழைக் குழந்தைகளுக்கு இலவசத் தொழிற்பயிற்சி அளிக்கும் ஒரு பெரிய கல்வி நிறுவனத்தை நிறுவப் போவதாக ரூபல் நாகி அறிவித்துள்ளார்.