ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மேல் ஏவுகணை தாக்குதல்
ஈராக் தலைநகர் பாக்தாத்தின் பசுமை மண்டலத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை நோக்கி, ஏவுகணைகள் ஏவப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. பாக்தாத் அருகிலுள்ள கடுமையாக பாதுகாக்கப்பட்ட பசுமை மண்டலத்தில், இன்று காலையில் ஏவுகணைகள் சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது. இன்று விடியற்காலையில் அரசு மற்றும் தூதராக கட்டிடங்களை ஏவுகணைகள் தாக்கியதாக, பெயர் குறிப்பிடப்படாத அமெரிக்க மற்றும் ஈராக்கி ராணுவ அதிகாரிகள் தெரிவித்ததாக, பல செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன. ஏவுகணைகள் ஏவப்பட்டதை தொடர்ந்து, "டக் அண்ட் கவர்" என்று மக்களை அழைக்கும் அலாரம் சைரன்கள் இயக்கப்பட்டன. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவை, அல் ஜசீரா தொலைக்காட்சி உறுதி செய்துள்ளது.
இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பதால், தாக்குதலுக்கு உள்ளாகும் அமெரிக்க படையல்
இருப்பினும் பாக்தாத் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம், இதுகுறித்து எந்த தகவலையும் தற்போது வரை தெரிவிக்கவில்லை. இஸ்ரேல்- பாலஸ்தீன போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா தொடர்ந்து செயல்பட்டு வருவதால், அமெரிக்க படைகள் மத்திய கிழக்கில் தொடர்ந்து தாக்கிலுக்கு உள்ளாகிவருகிறது. அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தகவலின் படி, அக்டோபர் 7ம் தேதி போர் தொடங்கியதற்கு பின்னர், ஈராக் மற்றும் சிரியாவில் முகாமிட்டுள்ள அமெரிக்க படைகள் குறைந்தது 66 முறை தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இதில் 60 வீரர்கள் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல்களுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து பதிலடி வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.