பகீர் எச்சரிக்கை! கொரோனா மற்றும் 2008 பொருளாதார வீழ்ச்சியை கணித்த பத்திரிகையாளர் புதிய கணிப்பு
செய்தி முன்னோட்டம்
2008 ஆம் ஆண்டின் உலகப் பொருளாதார வீழ்ச்சி மற்றும் 2019 ஆம் ஆண்டின் கொரோனா பெருந்தொற்று பரவல் ஆகிய இரண்டையும் முன்கூட்டியே கணித்து உலகிற்கு எச்சரிக்கை விடுத்தவர் பிரபல மூத்த பத்திரிகையாளர் ராபர்ட் பெஸ்டன். அவர் எச்சரித்த காலத்தில் அவரை அனைவரும் பயத்தை தூண்டுபவர் என்று விமர்சனம் செய்தனர். ஆனால் அவர் கணித்த இரண்டு பேரழிவுகளும் அப்படியே நடந்தேறின. தற்பொழுது 66 வயதாகும் ராபர்ட் பெஸ்டன், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தால் உலகிற்கு வரவிருக்கும் மாபெரும் ஆபத்து குறித்து மீண்டும் ஒரு அதிர்ச்சி எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
பேராபத்து
ஏஐ தொழில்நுட்பத்தால் வரவிருக்கும் பேரபாயம்
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி காரணமாக மனிதகுலத்திற்கு பெரும் ஆபத்து காத்திருப்பதாக ராபர்ட் பெஸ்டன் எச்சரித்துள்ளார்.
அவர் எழுதியுள்ள தி கில் சுவிட்ச் என்ற புதிய புத்தகத்தில், ஏஐ தொழில்நுட்பம் காரணமாக எக்கச்சக்கமான தொழிலாளர்கள் தங்களது வேலைகளை இழக்கும் பேரபாயம் நிலவுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உலக தலைவர்கள் மற்ற விஷயங்களைப் பற்றிப் பேசுவதை விட்டுவிட்டு, ஏஐ தொழில்நுட்பத்தால் ஏற்படப்போகும் இந்த வேலைவாய்ப்பு இழப்புகள் மற்றும் விளைவுகள் குறித்து உடனடியாகத் தீவிரமாக விவாதிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
புதிய பொருளாதாரம்
வருமான வரி இல்லாத புதிய பொருளாதார முறை
ஏஐ தொழில்நுட்பம் ஏற்கனவே பல வேலைகளைக் கைப்பற்றிவிட்டது என்றும், எதிர்காலத்தில் பல நிறுவனங்கள் மனிதர்களுக்குப் பதிலாக ஏஐ தொழில்நுட்பத்தையே அதிகளவில் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் பெஸ்டன் தெரிவித்துள்ளார்.
மக்கள் வேலைகளை இழந்து வருமானம் ஈட்ட முடியாத சூழ்நிலை உருவாகும் போது, அரசாங்கங்கள் வருமான வரி எதுவும் வசூலிக்காமல் பொதுமக்களுக்கான சேவைகளை எவ்வாறு நிதியளித்து நடத்துவது என்பது குறித்து சிந்திக்க வேண்டும் என்று அவர் யோசனை வழங்கியுள்ளார்.
இந்த மாற்றம் உலகப் பொருளாதார அமைப்பில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்.
மீண்டும் ஒரு வீழ்ச்சி
அடுத்த இரண்டு ஆண்டுகளில் உலகப் பொருளாதார வீழ்ச்சி?
செயற்கை நுண்ணறிவுக்கான தரவு மையங்கள் மற்றும் மின் நிலையங்களை நிறுவுவதற்காக உலகம் முழுவதும் கணக்கில்ட முடியாத அளவிலான பிரம்மாண்ட முதலீடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக, அடுத்த ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் உலகம் முழுவதும் ஒரு தீவிரமான நிதி நெருக்கடியும் பொருளாதார வீழ்ச்சியும் ஏற்படக்கூடும் என்று தான் உண்மையிலேயே அஞ்சுவதாக ராபர்ட் பெஸ்டன் கூறியுள்ளார்.
முந்தைய பேரழிவுகளைப் போல இதையும் அரசாங்கங்கள் அலட்சியப்படுத்தாமல் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அலட்சியம்
கடந்த கால அனுபவங்களும் அரசுகளின் அலட்சியமும்
2007 இல் வங்கித் துறையில் நடக்கும் தவறுகள் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தான் எச்சரித்த போது, பிபிசி நிறுவனத்திற்கு பல அரசியல்வாதிகள் கடிதம் எழுதி தன்னை முடக்க முயன்றதாக பெஸ்டன் நினைவு கூர்ந்துள்ளார்.
அதேபோல 2019 இறுதியில் வூஹானில் புதிய வைரஸ் பரவிய போதும் அரசை எச்சரித்தும் அவர்கள் கேட்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
குறைவான சாத்தியக்கூறு கொண்ட ஆனால் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சம்பவங்களை அரசுகள் அலட்சியம் செய்வதை நிறுத்திவிட்டு, தற்பொழுது ஏஐ விஷயத்தில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.