இங்கிலாந்து துணைப் பிரதமர் டொமினிக் ராப் ராஜினாமா செய்தார்
இங்கிலாந்து துணைப் பிரதமரும் நீதி அமைச்சருமான டொமினிக் ராப் இன்று(ஏப் 21) ராஜினாமா செய்தார். பணியிடத்தில் பிறரை கொடுமைபடுத்துவதாக அவருக்கு எதிராக எழுந்த புகார்களை அடுத்து இங்கிலாந்து துணைப் பிரதர் ராஜினாமா செய்துள்ளார். அக்டோபரில் ரிஷி சுனக் பிரிட்டிஷ் பிரதமராக பொறுப்பேற்றதில் இருந்து, தனிப்பட்ட நடத்தை காரணமாக அமைச்சரவையில் இருந்து வெளியேறும் மூன்றாவது பெரிய தலைவர் இவர் ஆவார். டொமினிக் ராப்பிற்கு எதிராக கொடுமைப்படுத்துதல் தொடர்பான இரண்டு புகார்கள் வந்ததை அடுத்து, அது குறித்து விசாரிப்பதற்கு வழக்கறிஞர் ஆடம் டோலியை ரிஷி சுனக் நியமித்தார். இது கடந்த நவம்பர் மாதம் நடந்தது.
குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், நான் பதவி விலகுவேன்: டொமினிக் ராப்
அதன் பிறகு, டொமினிக் ராப்புடன் பணிபுரிந்தவர்களிடம் இருந்து அதிகமான புகார்கள் வந்தன. இதையெல்லாம் விசாரித்த வழக்கறிஞர் ஆடம் டோலி, தனது அறிக்கையை நேற்று பிரதமர் ரிஷி சுனக்கிடம் சமர்ப்பித்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரிஷி சுனக், தனக்கு ராப் மீது முழு நம்பிக்கை இருக்கிறது என்றும், ஆனால் விசாரணை அறிக்கையை பரிசீலிக்க வேண்டிய அவசியமும் இருக்கிறது என்றும் கூறினார். விசாரணை அறிக்கை எப்போது வெளியிடப்படும் என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். புகார்கள் உறுதிப்படுத்தப்பட்டால், ராப் பதவி நீக்கம் செய்யப்படுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. கடந்த பிப்ரவரியில், டொமினிக் ராப், ஸ்கை நியூஸுக்கு அளித்த பேட்டியின் போது, "குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், நான் பதவி விலகுவேன்." என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.