
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் ஆலோசகராக பணியில் சேர்ந்தார் பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்
செய்தி முன்னோட்டம்
பிரிட்டனின் முன்னாள் பிரதமரான ரிஷி சுனக், அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு முன்னணித் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாஃப்ட் மற்றும் முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஸ்டார்ட்அப் நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic) ஆகியவற்றில் பகுதி நேர ஆலோசகர் பொறுப்புகளை ஏற்றுள்ளதாக பிரிட்டன் அரசு அறிவித்தது. பிரிட்டனின் வணிக நியமனங்கள் குறித்த ஆலோசனைக் குழுவின் (ACOBA) ஒப்புதலுக்குப் பிறகு இந்தப் பதவிகளை அவர் ஏற்றுக்கொண்டார். இந்த இரண்டு பதவிகளிலும், ரிஷி சுனக், அந்தந்த நிறுவனங்களின் மூத்த நிர்வாகிகளுக்கு பேரியல் பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியல் போக்குகள் குறித்த உயர்மட்ட வியூகப் பார்வைகளை வழங்குவார்.
பிரிட்டன் அரசு
பிரிட்டன் அரசில் லாபி செய்யக் கூடாது
இருப்பினும், அவர் இன்னமும் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதால், மைக்ரோசாஃப்ட் அல்லது ஆந்த்ரோபிக் சார்பாக பிரிட்டன் அரசாங்கத்திடம் லாபி செய்யக் கூடாது என்று ACOBA நிபந்தனை விதித்துள்ளது. மேலும், இந்தப் புதிய ஆலோசனைப் பதவிகள் மூலம் கிடைக்கும் தனது முழுச் சம்பளத்தையும், குழந்தைகளிடையே கணிதத் திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் தான் தொடங்கிய தி ரிச்மண்ட் ப்ராஜெக்ட் என்ற தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக அளிக்கப்போவதாக ரிஷி சுனக் உறுதியளித்துள்ளார். அக்டோபர் 2022 முதல் ஜூலை 2024 வரை பிரதமராக இருந்த சுனக், கடந்த ஆண்டுப் பொதுத் தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, சிலிக்கான் வேலியில் ஒரு வேலையை நாடி வருவதாக வந்த யூகங்களை இந்த நியமனங்கள் உறுதிப்படுத்துகின்றன.