LOADING...
சைலண்டாக இழுத்து மூடப்பட்ட DOGE துறை; எலான் மஸ்க் தலைமையிலான பிரிவின் செயல்பாடுகள் முடக்கம்
எலான் மஸ்க் தலைமையிலான DOGE பிரிவின் செயல்பாடுகள் முடக்கம்

சைலண்டாக இழுத்து மூடப்பட்ட DOGE துறை; எலான் மஸ்க் தலைமையிலான பிரிவின் செயல்பாடுகள் முடக்கம்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 24, 2025
09:50 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பால் உருவாக்கப்பட்ட, அரசு கட்டமைப்பில் சீர்திருத்தம் மற்றும் செலவுகளை குறைக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட "அரசு செயல்திறன் துறை" (Department of Government Efficiency - DOGE), அதன் பணிக்காலம் முடிவதற்கு எட்டு மாதங்களுக்கு முன்னதாகவே ரத்து செய்யப்பட்டுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன. அதிபர் டிரம்ப்பின் நிர்வாக உத்தரவின் கீழ் உருவாக்கப்பட்ட DOGE, எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லாமல், அதன் செயல்பாடுகளை நிறுத்தியுள்ளது. இந்த துறைக்கான செயல்பாட்டு ஆணைகள் ஜூலை 2026 வரை இருந்தும், முன்கூட்டியே முடக்கப்பட்டுள்ளது. DOGE-ன் செயல்பாடுகள் முடிவுக்கு வந்தாலும், அதன் சில மூத்த ஊழியர்கள் ஆகஸ்ட் மாத நிர்வாக உத்தரவின் கீழ் உருவாக்கப்பட்ட தேசிய வடிவமைப்பு ஸ்டுடியோவிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

எலான் மஸ்க்

எலான் மஸ்க் தலைமையிலான துறை- DOGE

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் ஆரம்பத்தில் இந்த DOGE துறையின் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்தினார். டிரம்ப்பின் இரண்டாவது பதவிக்காலத்தின் ஆரம்ப மாதங்களில், கூட்டாட்சி நிறுவனங்களின் வரவு செலவுகளை குறைத்து, அரசு செயல்பாடுகளை டிரம்ப்பின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப மாற்றுவதற்கான ஒரு "தாக்குதல் படை"யாக DOGE நிலைநிறுத்தப்பட்டது. மத்திய அரசின் மனிதவளத் துறையான Office of Personnel Management-ன் இயக்குநர் ஸ்காட் கூபோர், DOGE இப்போது ஒரு "மையப்படுத்தப்பட்ட நிறுவனம் அல்ல" என்று உறுதிப்படுத்தினார். அதன் பொறுப்புகள் இப்போது இருக்கும் கூட்டாட்சி கட்டமைப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. எலான் மஸ்க் மற்றும் அதிபர் ட்ரம்ப் இடையே ஏற்பட்ட பொதுவான கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, மஸ்க் மே மாதத்தில் DOGE-ல் இருந்து விலகி வெளியேறினார்.