இளவரசர் பிலிப் 8 ஆண்டுகளாக கணையப் புற்றுநோயுடன் போராடினார் என புதிய புத்தகம் வெளிப்படுத்துகிறது
செய்தி முன்னோட்டம்
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவரும், மறைந்த எடின்பர்க் கோமகனுமான இளவரசர் பிலிப், தனது வாழ்வின் கடைசி எட்டு ஆண்டுகளாக கணையப் புற்றுநோயுடன் போராடினார் என்று ஒரு புதிய அரச குடும்ப வாழ்க்கை வரலாறு வெளிப்படுத்தியுள்ளது. 2021 ஏப்ரலில் அவர் இறப்பதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, 2013-ல் இந்த நோய் கண்டறியப்பட்டது. இந்த நோயை அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியாது என்று நிபுணர்கள் கருதியதாக வரலாற்றாசிரியர் ஹியூகோ விக்கர்ஸ் கூறுகிறார். அவர் தனது ' இரண்டாம் எலிசபெத் மகாராணி: ஒரு தனிப்பட்ட வரலாறு' என்ற புத்தகத்தில் இந்த தகவல்களை விரிவாக விவரித்துள்ளார்.
உடல்நலப் போராட்டம்
இளவரசர் பிலிப் பொதுப் பணிகளுக்குத் திரும்பினார்
எழுத்தாளர் விக்கர்ஸ், "மருத்துவர்கள் அவரது கணையத்தில் ஒரு கட்டியை கண்டறிந்து, அவரது வயிற்றின் குறுக்கே வெட்டினார்கள்." எனக்கூறுகிறார். "அறுவை சிகிச்சை செய்ய முடியாத கணையப் புற்றுநோய் என்பதே தீர்ப்பாக அறிவிக்கப்பட்டது." எனத்தெரிவித்துள்ளார். இந்த நோயறிதலுக்கு பிறகு, இளவரசர் பிலிப் வீட்டில் குணமடைவதற்காக மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்தக் காலகட்டத்தில், அவர் பொது வாழ்க்கைக்குத் திரும்ப மாட்டாரோ என்ற அச்சங்கள் இருந்தன. இருப்பினும், இந்தச் சவால்கள் இருந்தபோதிலும், நார்போக்கின் சாண்ட்ரிங்ஹாம் எஸ்டேட்டில் உள்ள வுட் ஃபார்மில் சிறிது காலம் தங்கிய பிறகு, ஆகஸ்ட் 2013-ல் அவர் பொதுப் பணிகளுக்குத் திரும்பினார்.
மறைவு
இளவரசர் பிலிப் 2021 ஏப்ரல் 9 அன்று காலமானார்
இளவரசர் பிலிப் 2017-ல் தனது அரச கடமைகளிலிருந்து ஓய்வு பெற்று, தனது வாழ்நாளின் பெரும்பகுதியை வுட் ஃபார்மில் கழித்தார். 2021, ஏப்ரல் 9 அன்று நிகழ்ந்த அவரது மரணம், "முதுமை" காரணமாக ஏற்பட்டது. மேலும், அது அவரது 100-வது பிறந்தநாளுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்தது. இதுபோன்ற மைல்கற்கள் ஈர்க்கும் கவனத்தின் காரணமாக, பிலிப் "தனது 100-வது பிறந்தநாளை எட்ட விரும்பவில்லை" என்று விக்கர்ஸ் குறிப்பிடுகிறார். அவரது மரணத்தின்போது ராணி உடனிருக்கவில்லை. பிலிப் விடைபெறாமல் சென்றதால் இரண்டாம் எலிசபெத் "கடுங்கோபமடைந்தார்" என்று கூறப்படுகிறது. இந்த ஏப்ரல் மாதம், ராணி எலிசபெத்தின் 100வது பிறந்தநாளை பிரிட்டன் கொண்டாடும்.