LOADING...
ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் மீண்டும் இந்தியா மீது வரி விதிக்க டிரம்ப் திட்டமா?
வர்த்தக வரியை மேலும் உயர்த்தப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை

ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் மீண்டும் இந்தியா மீது வரி விதிக்க டிரம்ப் திட்டமா?

எழுதியவர் Venkatalakshmi V
Jan 05, 2026
08:34 am

செய்தி முன்னோட்டம்

ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தவில்லை என்றால், இந்திய பொருட்கள் மீதான வர்த்தக வரியை மேலும் உயர்த்தப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது ஏற்கனவே தள்ளாட்டத்தில் இருக்கும் இருநாட்டு வர்த்தக உறவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் புகழ்ந்தாலும், வர்த்தக ரீதியாக விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை என்பதைத் தெளிவுபடுத்தினார். "பிரதமர் மோடி ஒரு நல்ல மனிதர். ஆனால் ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது அவருக்குத் தெரியும். என்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பது அவசியம். இந்தியா ஒத்துழைக்கவில்லை என்றால், மிக விரைவில் அவர்கள் மீது கூடுதல் வரிகளை எங்களால் விதிக்க முடியும்," என்று அவர் கூறினார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

வரிச் சுமை

ஏற்கனவே அமலில் உள்ள 50% வரிச் சுமை

இந்த விவகாரத்தில் டிரம்ப் நிர்வாகம் ஏற்கனவே 2025 ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் இறக்குமதி பொருட்கள் மீது கடுமையான வரிகளை விதித்திருந்தது. அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா விதிக்கும் வரிக்கு ஈடாக 25% 'பரஸ்பர வரி' (Reciprocal Tariff), இது தவிர ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கியதற்காக அபராதமாக மற்றுமொரு 25% வரி. இதனால் சில குறிப்பிட்ட இந்தியப் பொருட்களின் மீதான வரி 50% வரை உயர்த்தப்பட்டது. தற்போது இதையும் தாண்டி புதிய வரிகள் விதிக்கப்படலாம் என டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

Advertisement

முரண்பாடு

மோடி - டிரம்ப் இடையே முரண்பாடு

கடந்த அக்டோபர் மாதம், "இந்தியா இனி ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்காது என்று பிரதமர் மோடி எனக்கு உறுதி அளித்துள்ளார்" என டிரம்ப் கூறியிருந்தார். ஆனால், இந்தியத் தரப்பில் அப்படி எந்த வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை என அப்போதே மறுப்பு தெரிவிக்கப்பட்டது. தற்போது மீண்டும் அதே விவகாரத்தைக் கையில் எடுத்துள்ள டிரம்ப், மோடிக்கு இது குறித்துத் தெரியும் எனக் கூறி அழுத்தத்தை அதிகரித்துள்ளார். இந்த மிரட்டல்களுக்கு மத்தியிலும், இந்தியா தனது நிலையில் உறுதியாக உள்ளது. "இந்தியாவின் எரிசக்தி கொள்கை என்பது நாட்டு மக்களின் தேவையையும், சந்தையில் கிடைக்கும் லாபகரமான விலையையும் பொறுத்தது" என்று டெல்லி தொடர்ந்து கூறி வருகிறது. ரஷ்யா தற்போது இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் விநியோகஸ்தராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement