அமெரிக்கா பல்கலைக்கழகங்களின் நிதிக்கு வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கை அவசியம் என்கிறார் டிரம்ப்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார். அமெரிக்கக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் நிதி நிலைமை வலுவாக இருக்க, வெளிநாட்டு மாணவர்கள் அவசியம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். வெளிநாட்டு மாணவர்களை அனுமதிப்பது ஒரு நல்ல "வணிக நடைமுறை" என்றும், இது நாட்டினுடைய உயர்கல்வி அமைப்பை நிதி ரீதியாக வலுவாக வைத்திருக்கிறது என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு மாணவர்களின் சேர்க்கையைத் திடீரென குறைத்தால், அமெரிக்காவில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் மூடப்படும் அபாயம் உள்ளது என்று அவர் எச்சரித்தார். இந்தக் கல்வி நிறுவனங்கள் வெளிநாட்டு மாணவர்களின் கல்விக் கட்டணத்தை நம்பியே இயங்குவதாகவும் குறிப்பிட்டார்.
பொருளாதாரப் பங்களிப்பு
சர்வதேச மாணவர்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பதாக கூறுகிறார் டிரம்ப்
சர்வதேச மாணவர்கள் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு "டிரில்லியன் கணக்கான டாலர்களை" பங்களிக்கிறார்கள் என்றும், உள்நாட்டு மாணவர்களை விட இருமடங்கு அதிகமாகக் கட்டணம் செலுத்துகிறார்கள் என்றும் டிரம்ப் சுட்டிக்காட்டினார். "எனக்கு அவர்கள் (வெளிநாட்டு மாணவர்கள்) வேண்டும் என்றில்லை, ஆனால் இதை நான் ஒரு வணிகமாகவே பார்க்கிறேன். நம்முடைய கல்விக் கட்டமைப்பு செழிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்," என்று ஃபாக்ஸ் நியூஸ் தொகுப்பாளர் லாரா இங்க்ராமுடன் பேசியபோது டிரம்ப் தெரிவித்தார். அதிபர் டிரம்ப் நிர்வாகம் சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ள நிலையில், இவருடைய இந்த ஆதரவான கருத்து, முந்தைய நடவடிக்கைகளுக்கு மாறுபட்டதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.