அரசுக்குள்ளேயே ஒரு எட்டப்பன்! ஈரானில் நடந்த ரகசிய ஆபரேஷனை காட்டிக் கொடுத்தது யார்?
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க விமானப்படை வீரர் ஈரானில் இருந்து அதிரடியாக மீட்கப்பட்ட விவகாரத்தில், அமெரிக்க அரசுக்குள்ளேயே ஒரு 'உளவு நபர்' (Mole) இருக்கலாம் என்ற அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் அதிரடி குற்றச்சாட்டு சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், இந்த விவகாரத்தில் ரகசியக் கசிவை ஏற்படுத்திய நபரை தீவிரமாக தேடி வருவதாகத் தெரிவித்தார். இந்த மீட்பு பணியின்போது, எதிரி நாட்டை ஏமாற்றி, அமெரிக்கா அந்த அதிகாரி ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருப்பதாக ஈரானை நம்ப வைத்துவிட்டு, மற்றொரு பகுதியில் இருந்து அவரைப் பத்திரமாக மீட்டெடுத்தது.
மர்ம நபர்
அரசுக்குள் இருக்கும் அந்த மர்ம நபர் யார்?
ஈரானிய எல்லையில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பிறகு, அதிலிருந்த ஆயுத அமைப்பு அதிகாரியை மீட்கும் ரகசிய நடவடிக்கையின் போது தகவல்கள் கசிந்துள்ளன. "இந்தத் தகவலை வெளியிட்ட அந்த மர்ம நபரைத் தேடும் பணியில் எனது நிர்வாகம் மிகத் தீவிரமாக உள்ளது" என்று ட்ரம்ப் கூறினார். அந்த நபர் வெளியிட்ட ரகசியத் தகவல்கள், மீட்புப் பணியில் இருந்த அமெரிக்க வீரர்களுக்கும், காயமடைந்த நிலையில் இருந்த அந்த விமானப்படை அதிகாரிக்கும் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தியதாக அவர் சாடினார்.
எச்சரிக்கை
பத்திரிகையாளர்களுக்கு ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை
இந்த ரகசிய மீட்புப் பணி குறித்த செய்தியை முதலில் வெளியிட்ட பத்திரிகையாளர் மற்றும் செய்தி நிறுவனம் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளார். "செய்தியை வெளியிட்டவர் தனது ஆதாரத்தை (Source) வெளிப்படுத்தாவிட்டால் அவர் சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும்" என்று அவர் காட்டமாகக் கூறினார். நியூயார்க் டைம்ஸ், ஃபாக்ஸ் நியூஸ் மற்றும் ஆக்சியோஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்தச் செய்தியை முதலில் வெளியிட்டிருந்தாலும், ட்ரம்ப் எந்த ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பெயரையும் நேரடியாகக் குறிப்பிடவில்லை.
மீட்பு
155 விமானங்கள்: ஒரு பிரம்மாண்ட மீட்புப் போர்
இந்த மீட்புப் பணியின் பிரம்மாண்டம் குறித்துப் பேசிய ட்ரம்ப், இதில் சுமார் 155 விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டதாகத் தெரிவித்தார். இதில் 4 குண்டுவீச்சு விமானங்கள், 64 போர் விமானங்கள், 48 எரிபொருள் நிரப்பும் விமானங்கள் மற்றும் 13 மீட்பு விமானங்கள் அடங்கும். ஈரானியப் படைகளைத் திசைதிருப்ப பல 'தந்திரமான' நடவடிக்கைகளை அமெரிக்கப் படைகள் மேற்கொண்டன. காயமடைந்த அந்த அதிகாரி, ரத்த வெள்ளத்திலும் மலைப்பகுதிகளில் ஏறித் தப்பித்து, அமெரிக்கப் படைகளைத் தொடர்பு கொண்டதாக ட்ரம்ப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். விமானம் வீழ்ந்த இடத்திற்கு ஈரானியப் படைகள் விரைந்து வரும் என்பதால், அந்த அதிகாரி அங்கிருந்து வெகுதூரம் தப்பிச் சென்றது புத்திசாலித்தனமான முடிவு என்று ட்ரம்ப் பாராட்டினார்.