நிலநடுக்கத்தால் அதிரும் ஜப்பான்! வடக்கு கடற்கரையைத் தாக்கிய 80 செமீ சுனாமி; புல்லட் ரயில் சேவைகள் நிறுத்தம்
செய்தி முன்னோட்டம்
ஜப்பானின் வடக்கு கடலோரப் பகுதிகளில் திங்கள்கிழமை பிற்பகல் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, இது அப்பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இவாடே மாகாணத்தில் உள்ள குஜி துறைமுகத்தில் சுமார் 80 சென்டிமீட்டர் (31 அங்குலம்) உயரத்திற்கு சுனாமி அலைகள் தாக்கியதாக ஜப்பானின் வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது. முன்னதாக, 3 மீட்டர் உயரம் வரை சுனாமி அலைகள் எழக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டிருந்த நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற அறிவுறுத்தப்பட்டனர். இவாடே, ஆமோரி மற்றும் ஹொக்கைடோவின் தென்கிழக்கு பகுதிகளில் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
பாதிப்புகள்
நிலநடுக்கத்தின் தீவிரம் மற்றும் பாதிப்புகள்
சான்ரிகு கடற்கரைக்கு அப்பால் பசிபிக் பெருங்கடலில், தரைமட்டத்திலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜப்பானின் நிலநடுக்க தீவிரத்தன்மை அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 'அப்பர் 5' எனப் பதிவாகியுள்ளது, இது மக்கள் நடமாடுவதற்கே சிரமப்படும் அளவுக்கு அதிரடியை ஏற்படுத்தியது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மியாஹி மற்றும் புகுஷிமா கடற்கரைப் பகுதிகளுக்கும் மிதமான சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. இதனால், அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் உடனடியாக உயரமான இடங்களுக்குச் செல்லுமாறு அவசரக்கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அவசர நடவடிக்கை
போக்குவரத்து மற்றும் அவசரகால நடவடிக்கைகள்
இந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தால், ஜப்பானின் முக்கியத் தீவான ஹோன்ஷுவின் வடக்கு முனையில் உள்ள ஆமோரியில் புல்லட் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. ஜப்பானின் பிரதமர் சனாயே டகாயிச்சி தலைமையில் அவசரக்காலக் குழு ஒன்று உருவாக்கப்பட்டு, நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த கணக்கெடுப்பு மற்றும் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
புவியியல் அமைப்பு
ஜப்பானின் புவியியல் அமைப்பும் நிலநடுக்க அச்சுறுத்தலும்
பசிபிக் பெருங்கடலின் ரிங் ஆஃப் ஃபயர் பகுதியில் அமைந்துள்ள ஜப்பான், உலகின் நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. புள்ளிவிவரங்களின்படி, ஜப்பானில் ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் ஒருமுறை சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. மேலும், உலகம் முழுவதும் 6.0 அல்லது அதற்கு மேற்பட்ட ரிக்டர் அளவில் பதிவாகும் நிலநடுக்கங்களில் சுமார் 20 சதவீத பங்களிப்பு ஜப்பானுக்கு மட்டுமே உண்டு. இத்தகைய நிலநடுக்க அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து எதிர்கொள்ளும் வகையில், ஜப்பான் அரசு நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் அவசரக்கால கட்டமைப்பு முறைகளை மிகவும் வலுவாகப் பராமரித்து வருவது குறிப்பிடத்தக்கது.