LOADING...
அமெரிக்காவை மிரட்டும் அமீரகம்? ஈரான் போரினால் வளைகுடாவில் உருவான டாலர் தட்டுப்பாடு!
ஈரான் போரினால் வளைகுடாவில் உருவான டாலர் தட்டுப்பாடு

அமெரிக்காவை மிரட்டும் அமீரகம்? ஈரான் போரினால் வளைகுடாவில் உருவான டாலர் தட்டுப்பாடு!

எழுதியவர் Venkatalakshmi V
Apr 20, 2026
10:48 am

செய்தி முன்னோட்டம்

மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் ஈரான் போர், உலகப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகக் கருதப்படும் 'பெட்ரோ-டாலர்' முறைக்கே சவால் விடுக்கும் நிலையை உருவாக்கியுள்ளது. போரினால் ஏற்பட்டுள்ள டாலர் தட்டுப்பாட்டை சமாளிக்க, ஐக்கிய அரபு அமீரகம் (UAE) எடுத்துள்ள அதிரடி முடிவு அமெரிக்காவை திணறடித்துள்ளது. 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' (WSJ) அறிக்கையின்படி, அமீரக அதிகாரிகள் அமெரிக்க அதிகாரிகளிடம் ஒரு முக்கியமான எச்சரிக்கையை முன்வைத்துள்ளனர். அதில், போரினால் அமீரகத்திற்குத் தேவையான டாலர் புழக்கம் குறைந்தால், இனி எண்ணெய் விற்பனை மற்றும் இதர வர்த்தகங்களுக்கு சீனாவின் 'யுவான்' அல்லது பிற நாட்டுப் பணத்தைப் பயன்படுத்த நேரிடும் எனத் தெரிவித்துள்ளனர்.

தட்டுப்பாடு

டாலர் தட்டுப்பாடும் 'கரன்சி ஸ்வாப்' கோரிக்கையும்

உலகெங்கிலும் கச்சா எண்ணெய் டாலர் மூலமே வர்த்தகம் செய்யப்படுவதால், டாலர் மதிப்பு உயர்ந்து காணப்படுகிறது. அமீரகம் போன்ற ஒரு பெரிய எண்ணெய் உற்பத்தி நாடு யுவானுக்கு மாறினால், அது சர்வதேசச் சந்தையில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தைத் தகர்த்துவிடும். அமீரக மத்திய வங்கி ஆளுநர் கலீத் முகமது பாலாமா, அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் மற்றும் கருவூலச் செயலர் ஸ்காட் பெசன்ட் ஆகியோரிடம் 'கரன்சி ஸ்வாப்' வசதியைக் கோரியுள்ளார். "அதிபர் டிரம்ப் எடுத்த முடிவால்தான் (ஈரான் மீதான தாக்குதல்) நாங்கள் இந்தப் போரில் சிக்கிக்கொண்டோம். எனவே, இதன் பொருளாதாரப் பாதிப்புகளிலிருந்து எங்களைக் காக்க வேண்டியது அமெரிக்காவின் கடமை," என அமீரக தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.

தயக்கம்

அமெரிக்காவின் தயக்கம்

பொதுவாக, இத்தகைய ஸ்வாப் வசதிகளை அமெரிக்கப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் சூழல் இருந்தால் மட்டுமே அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வழங்கும். அமீரகத்திற்கு இதை வழங்குவது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. தரக்கட்டுப்பாட்டு நிறுவனமான S&P Global, அமீரகத்தின் வலுவான நிதி நிலைமை ஆரம்பக்கட்டப் பாதிப்புகளை சமாளிக்கும் என்று கூறினாலும், போர் நீண்டுகொண்டே போனால் எண்ணெய் ஏற்றுமதியும், உள்கட்டமைப்புகளும் சேதமடைவது அந்நாட்டுப் பொருளாதாரத்திற்குப் பெரும் ஆபத்தாக முடியும் என எச்சரித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்தால், அமீரகத்தின் டாலர் வருவாய் பெருமளவு குறைந்துள்ளது. அமெரிக்கா உதவி செய்ய மறுக்கும் பட்சத்தில், அமீரகம் சீனாவுடன் நெருக்கமான பொருளாதார உறவை மேற்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். இது அமெரிக்கா-UAE இடையிலான நீண்டகால ராஜதந்திர உறவில் ஒரு மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தும்.

Advertisement