LOADING...
இந்தியா -எத்தியோப்பியா இடையேயான வரலாற்றுப் பாலம்: மாலிக் அம்பர் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்
இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று பிணைப்பை நினைவு கூர்ந்தார் பிரதமர் நரேந்திர மோடி

இந்தியா -எத்தியோப்பியா இடையேயான வரலாற்றுப் பாலம்: மாலிக் அம்பர் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்

எழுதியவர் Venkatalakshmi V
Dec 17, 2025
07:17 pm

செய்தி முன்னோட்டம்

பிரதமர் நரேந்திர மோடி எத்தியோப்பியா சென்றிருந்தபோது, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் மாலிக் அம்பர் என்பவரை பற்றி குறிப்பிட்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று பிணைப்பை நினைவு கூர்ந்தார். இந்த நிலையில் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் மாலிக் அம்பர் என்பவரை பற்றி குறிப்பிடுகிறார்கள் யார் இந்த மாலிக் அம்பர்? அவர் ஏன் இந்தியா-எத்தியோப்பியா உறவில் முக்கியமாக கருதப்படுகிறார்? இவர் 1548-ல் எத்தியோப்பியாவில் பிறந்தவர். இவரது இயற்பெயர் சாபு. சிறு வயதிலேயே கடத்தப்பட்டு அடிமையாக விற்கப்பட்ட இவர், பல கைகள் மாறி இறுதியில் இந்தியாவின் தக்ஷிண(Deccan) பகுதிக்கு கொண்டு வரப்பட்டார். அகமதுநகர் சுல்தானகத்தில் பணிபுரிந்த இவர், தனது அபாரமான போர் யுக்தி மற்றும் நிர்வாகத் திறமையால் அடிமைத் தளையிலிருந்து விடுபட்டு, அந்த நாட்டின் பிரதமராகவும் உயர்ந்தார்.

போர்வீரன்

முகலாயர்களை எதிர்த்த போர்வீரன்

மாலிக் அம்பர் முகலாய பேரரசர்களான அக்பர் மற்றும் ஜஹாங்கீர் ஆகியோரின் படைகளைத் தக்ஷிண பகுதிக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினார். இந்தியாவில் முதன்முதலில் மறைந்திருந்து தாக்கும் போர் முறையை (Guerrilla Warfare) முறையாக அறிமுகப்படுத்தியவர்களில் இவரும் ஒருவர். மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி மகாராஜின் போர் முறைகளுக்கு மாலிக் அம்பரின் யுக்திகளே முன்னோடியாக இருந்தன என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இவர் அவுரங்காபாத் நகரை உருவாக்கினார். விவசாயிகளுக்கான நிலவரித் திட்டத்தில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்தார், இது பிற்காலத்தில் ஆங்கிலேயர் காலம் வரை பின்பற்றப்பட்டது.

முக்கியத்துவம்

மோடியின் உரையின் முக்கியத்துவம்

பிரதமர் மோடி தனது உரையில், "எத்தியோப்பிய மண்ணில் பிறந்து இந்தியாவின் தக்காணப் பகுதியை ஆண்ட மாலிக் அம்பர், இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான நாகரிகப் பிணைப்பின் சின்னம்" என்று குறிப்பிட்டார். இது ஆப்பிரிக்க-இந்திய உறவுகளில் எத்தியோப்பியாவின் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்தும் விதமாக அமைந்தது. இந்தியாவிற்கும் எத்தியோப்பியாவிற்கும் இடையிலான நம்பகமான கூட்டாண்மையில் பிரதமர் மோடியின் எத்தியோப்பியா வருகை ஒரு முக்கிய படியாகக் கருதப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு நிர்வாகம், அமைதி காத்தல், டிஜிட்டல் திறன், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை உள்ளடக்கியது. சுகாதார ஒத்துழைப்பு மூலம் மனித கண்ணியத்தை உறுதி செய்யும் அதே வேளையில் அறிவு மற்றும் புதுமை மூலம் மக்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுகிறது.

Advertisement