LOADING...
43 ஆண்டுகளுக்குப் பிறகு நார்வே சென்ற முதல் இந்திய பிரதமர் மோடி: இந்தியா-நார்டிக் உறவில் புதிய அத்தியாயம்
43 ஆண்டுகளுக்குப் பிறகு நார்வே சென்ற முதல் இந்திய பிரதமர் மோடி

43 ஆண்டுகளுக்குப் பிறகு நார்வே சென்ற முதல் இந்திய பிரதமர் மோடி: இந்தியா-நார்டிக் உறவில் புதிய அத்தியாயம்

எழுதியவர் Sekar Chinnappan
May 18, 2026
03:33 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தற்பொழுது மே 18 முதல் 19 (2026) வரை இரண்டு நாட்கள் அரசுமுறைப் பயணமாக நார்வே நாட்டிற்குச் சென்றுள்ளார். இந்தியப் பிரதமர் ஒருவர் நார்வே மண்ணில் தடம் பதிப்பது கடந்த 43 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னதாக 1983 இல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நார்வே சென்றதே இறுதியானதாக இருந்தது. ஐரோப்பிய பாதுகாப்பு நெருக்கடிகளுக்கு மத்தியில் பிரதமரின் இந்த ஆஸ்லோ பயணம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உற்றுநோக்கப்படுகிறது.

இந்தியா - நார்டிக் உச்சிமாநாடு

ஆஸ்லோவில் நடைபெறும் 3ஆவது இந்தியா-நார்டிக் உச்சி மாநாடு

பிரதமர் நரேந்திர மோடியின் இந்த இருதரப்புப் பயணத்தின் ஒரு முக்கிய அங்கமாக, நார்வே தலைநகர் ஆஸ்லோவில் 3ஆவது இந்தியா-நார்டிக் உச்சி மாநாடு தற்பொழுது நடைபெறுகிறது. இம்மாநாட்டில் இந்தியப் பிரதமருடன் நார்வே, டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய ஐந்து நார்டிக் நாடுகளின் பிரதமர்களும் நேரடியாகப் பங்கேற்கின்றனர். விண்வெளி, கடல்சார் ஆராய்ச்சி மற்றும் பசுமை ஆற்றல் போன்ற துறைகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு நார்டிக் நாடுகள் எவ்வாறு உதவ முடியும் என்பது குறித்து இங்கு விவாதிக்கப்படுகிறது.

100 பில்லியன் டாலர் முதலீடு

இஎஃப்டிஏ ஒப்பந்தத்தின் 100 பில்லியன் டாலர் முதலீடு

இந்தியா மற்றும் இஎஃப்டிஏ கூட்டமைப்பு நாடுகளுக்கு இடையே கையெழுத்தாகியுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தத்தின்படி, அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 100 பில்லியன் டாலர் அளவிற்கு நேரடி வெளிநாட்டு முதலீடுகளைச் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறித்துப் பேசிய நார்வே தூதுவர் மே-எலின் ஸ்டீனர், இந்த முதலீடு என்பது முற்றிலும் நார்வேயின் தனியார் நிறுவனங்கள் மூலமாக இந்தியாவில் முதலீடு செய்யப்பட உள்ள உள்கட்டமைப்புத் திட்டங்களாகும் என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

இந்திய பங்குச் சந்தை

இந்தியப் பங்குச்சந்தையில் நார்வே பொது நிதியம் செலுத்தியுள்ள முதலீடுகள்

உலகின் மிகப்பெரிய இறையாண்மை நிதியமான நார்வேயின் அரசு பென்ஷன் ஃபண்ட் குளோபல் தற்பொழுது இந்தியப் பங்குச் சந்தையில் உள்ள 495 நிறுவனங்களில் மட்டும் சுமார் 30.8 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்த முதலீட்டு மதிப்பு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. எனினும், இந்த நிதியத்தின் முதலீடுகள் எதுவும் இஎஃப்டிஏ வர்த்தக ஒப்பந்தத்தின் 100 பில்லியன் டாலர் உறுதிமொழிக்குள் கணக்கிடப்பட மாட்டாது என்றும் தூதுவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

Advertisement

பசுமைக் கூட்டாண்மை

இரு நாடுகளின் உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் பசுமைக் கூட்டாண்மை

இந்தியா மற்றும் நார்வே நாடுகளுக்கு இடையே நிலவி வரும் பாரம்பரிய கப்பல் போக்குவரத்து மற்றும் மீன்வளத் துறைகளைத் தாண்டி, தற்பொழுது இருநாட்டு உறவுகளையும் முற்றிலும் எதிர்காலத்தை நோக்கியதாக மாற்றுவதற்கு 'கிரீன் ஸ்ட்ரேடஜிக் பார்ட்னர்ஷிப்' எனப்படும் புதிய பசுமை உத்திசார் கூட்டாண்மை கட்டமைப்பை உருவாக்க இரு நாடுகளும் திட்டமிட்டுள்ளன. இதன் மூலம் சுற்றுசூழலுக்குப் பாதிப்பில்லாத புதிய பசுமைத் தொழில்களை உருவாக்குதல், காலநிலை மாற்றங்களுக்கு எதிரான கூட்டு ஆராய்ச்சி மற்றும் ஸ்டார்ட்அப் தொழில்நுட்பப் பரிமாற்றங்களை அதிகரிக்க வழிவகை செய்யப்படவுள்ளது.

ஆர்க்டிக் காலநிலை ஆராய்ச்சி

ஆர்க்டிக் காலநிலை ஆராய்ச்சியும் 'ஹிமாத்ரி' ஆய்வு மையத்தின் செயல்பாடுகளும்

காலநிலை மாற்றங்களால் ஆர்க்டிக் பகுதி பனிப்பாறைகள் உருகுவதற்கும், இந்தியப் பருவமழை பொழிவில் ஏற்படும் மாறுபாடுகளுக்கும் இடையே உள்ள தொடர்புகளை ஆராய இந்திய விஞ்ஞானிகள் தற்பொழுது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக நார்வேயின் ஸ்வல்பார்ட் தீவுக்கூட்டத்தில் இந்தியா தங்களின் ஹிமாத்ரி என்ற அதிநவீன ஆய்வு நிலையத்தை வெற்றிகரமாக இயக்கி வருகிறது. வடக்கு கடல் வழித்தடத்தை வணிக ரீதியாகப் பயன்படுத்துவது குறித்த விவாதங்கள் எழுந்த போதிலும், அனைத்துப் பணிகளும் சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டே இருக்க வேண்டும் என்பதில் நார்வே உறுதியாக உள்ளது.

கடல்சார் கழிவு மேலாண்மை

பசுமைக் கப்பல் போக்குவரத்து மற்றும் கடல்சார் கழிவு மேலாண்மைக்கான கூட்டு முயற்சிகள்

மின்சாரப் படகுகள் மற்றும் ஹைட்ரஜன் எரிபொருள் கப்பல் போக்குவரத்தில் உலகத் தலைவனாக விளங்கும் நார்வேயின் தொழில்நுட்பம், சாகர்மாலா திட்டத்தின் கீழ் துறைமுகங்களை நவீனமயமாக்கி வரும் இந்தியாவிற்குப் பெரிதும் கைக்கொடுக்கவுள்ளது. மேலும், கடந்த 2019 இல் தொடங்கப்பட்ட 'இந்தியா-நார்வே கடல்சார் தூய்மைத் திட்டத்தின்' கீழ், இந்திய கடற்கரைகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி, அதனைச் சுழற்சி பொருளாதாரத்திற்கு உட்படுத்தும் முக்கியத் திட்டங்கள் தற்பொழுது 2030 ஆம் ஆண்டு வரை வெற்றிகரமாக நீட்டிக்கப்பட்டுள்ளன.

உலகளாவிய தகுதி

சர்வதேச ராஜதந்திர அரங்கில் ஒரு முக்கியப் பாலமாகத் திகழும் இந்தியாவின் உலகளாவிய தகுதி

ஐரோப்பாவின் பாதுகாப்புச் சூழல் முற்றிலும் மாறியுள்ள வேளையில், நார்டிக் நாடுகளான ஸ்வீடனும் பின்லாந்தும் தங்களின் ராணுவ நடுநிலைப்பாட்டைக் கைவிட்டு நேட்டோ அமைப்பில் இணைந்துள்ளன. இத்தகைய சூழலில், மேற்கத்திய நாடுகளுடனும் அதே வேளையில் வளரும் நாடுகளுடனும் மிகச் சிறந்த ராஜதந்திர உறவையும் நம்பகத்தன்மையையும் கொண்டுள்ள ஒரே உலகளாவிய சக்தியாக இந்தியா திகழ்கிறது. ஐமெக் போன்ற புதிய பொருளாதார வழித்தடங்கள் மூலம் இந்தியா கட்டமைத்து வரும் புதிய ராஜதந்திரப் பாலத்தை நார்வே தற்பொழுது முழுமனதுடன் வரவேற்பதாகத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement