20வது வெளிநாட்டு நாடாளுமன்ற உரை! சீஷெல்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசியதன் முக்கிய அம்சங்கள்
செய்தி முன்னோட்டம்
சீஷெல்ஸ் நாட்டிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28). அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். சீஷெல்ஸ் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் முதல் இந்தியப் பிரதமர் இவராவார். அங்கு பேசிய பிரதமர் மோடி, "இந்த சபையில் உரையாற்றும் முதல் இந்தியப் பிரதமர் என்ற கௌரவத்தைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களின் வாழ்த்துகளை உங்களுக்கு நான் கொண்டு வந்துள்ளேன்." என்று குறிப்பிட்டார். கடந்த 2015 ஆம் ஆண்டில் தான் பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர் முதன்முதலில் பார்வையிட்ட இந்தியப் பெருங்கடல் தீவு நாடு சீஷெல்ஸ் தான் என்றும், ஒரு தசாப்தத்திற்குப் பிறகும் அந்தப் பிணைப்பு நீடிப்பதாகவும் கூறினார்.
வேற்றுமையில் ஒற்றுமை
ஷெல்ஸ் மக்களின் பன்முகத்தன்மை
சீஷெல்ஸ் நாட்டின் பலம் அங்கு வாழும் மக்கள் தான் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வந்த மக்கள் தங்களது மாறுபட்ட மொழிகள், பழக்கவழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகளை ஒன்றிணைத்து சீஷெல்லோயிஸ் என்ற பொதுவான அடையாளத்தை உருவாக்கியுள்ளனர் என்றார். நாடாளுமன்றத்தின் முதன்மைக் கோட்பாடான வேற்றுமையில் ஒற்றுமை என்பதை அவர்கள் தங்களது வாழ்வில் கடைப்பிடித்து வருவதாக பிரதமர் கூறினார். இரு நாடுகளின் கலாச்சாரப் பிணைப்பானது சீஷெல்ஸின் அன்றாட உணவு வகைகளான காரி கோகோ, சமோசா மற்றும் சட்னி ஆகியவற்றின் சுவைகளில் கலந்துள்ளது என்றும், இங்கு கொண்டாடப்படும் தீவாளி, தைப்பொங்கல் மற்றும் நவராத்திரி பண்டிகையின் போது ஆடப்படும் கர்பா நடனம் ஆகியவற்றிலும் இந்த ஒற்றுமை பிரதிபலிக்கிறது என்றார்.
20வது உரை
பிரதமர் மோடியின் 20 ஆவது நாடாளுமன்ற மைல்கல்
பிரதமர் நரேந்திர மோடி சர்வதேச அரங்கில் உரையாற்றிய 20 ஆவது வெளிநாட்டு நாடாளுமன்றம் சீஷெல்ஸ் ஆகும். கடந்த 2014 ஆம் ஆண்டு பதவியேற்றது முதல் பூடான், நேபாளம், ஆஸ்திரேலியா, பிஜி மற்றும் 2015 இல் மொரிஷியஸ், இலங்கை, மங்கோலியா, பிரிட்டன், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடாளுமன்றங்களில் உரையாற்றியுள்ளார். மேலும், 2016 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் இருமுறை உரையாற்றியுள்ளார். தொடர்ந்து உகாண்டா (2018), மாலத்தீவு (2019), கயானா (2024), கானா, டிரினிடாட் & டொபாகோ, நமீபியா (ஜூலை 2025), எத்தியோப்பியா (டிசம்பர் 2025) மற்றும் இந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் இஸ்ரேல் நாடாளுமன்றமான கென்னசட் அவையிலும் அவர் உரையாற்றியுள்ளார்.
விருது
கார்டியன் ஆஃப் தி புளூ ஹொரைசன் விருது
கடந்த 1976 இல் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்ற சீஷெல்ஸ் நாட்டின் 50 ஆவது தேசிய தினக் கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். இந்த அரசுமுறைப் பயணத்தின் போது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை நடவடிக்கை மற்றும் நீலப் பொருளாதாரம் ஆகியவற்றில் ஆற்றிய பங்களிப்பிற்காக சீஷெல்ஸ் நாட்டின் சுற்றுச்சூழல் கௌரவமான கார்டியன் ஆஃப் தி புளூ ஹொரைசன் விருது அதிபர் டாக்டர் பேட்ரிக் ஹெர்மினி மூலம் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த உயரிய கௌரவத்தை ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் தான் முழுமையாக அர்ப்பணிப்பதாகப் பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.