'மாலத்தீவில் உள்ள விமானிகளுக்கு இந்திய விமானங்களை ஓட்ட தெரியவில்லை': மாலத்தீவின் அமைச்சர்
மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸுவின் உத்தரவின் பேரில் 76 இந்திய பாதுகாப்பு வீரர்கள் மாலத்தீவை விட்டு வெளியேற்றப்பட்டனர். அது நடந்து சில நாட்களே ஆகும் நிலையில், இந்தியா வழங்கிய மூன்று விமானங்களை இயக்கும் திறன் கொண்ட விமானிகள் மாலத்தீவு இராணுவத்திடம் இன்னும் இல்லை என்று அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் காசன் மௌமூன் ஒப்புக்கொண்டுள்ளார். இரண்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் ஒரு டோர்னியர் விமானங்களை இயக்குவதற்காக மாலத்தீவில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய வீரர்களை மாலத்தீவு அரசாங்கம் சில நாட்களுக்கு முன் திருப்பி அனுப்பியது. இந்நிலையில், இந்திய இராணுவ வீரர்களுக்கு பதிலாக இந்திய அதிகாரிகளை கொண்டு வருவது குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளிக்க அதிபர் அலுவலகத்தில் கடந்த சனிக்கிழமை ஒரு செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
இந்திய விமானங்களில் பறக்க உரிமம் பெற்ற நபர்கள் எவரும் மாலத்தீவின் படையில் இல்லை
அந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய காசான் மௌமூன் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த காசன் மௌமூன், இந்திய இராணுவத்தால் வழங்கப்பட்ட மூன்று விமானங்களை இயக்கக்கூடிய மாலத்தீவு வீரர்கள் யாரும் மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படையில்(எம்என்டிஎஃப்) இல்லை என்று கூறியுள்ளார். மேலும், முந்தைய அரசாங்கத்தின் ஒப்பந்தங்களின்படி, சில வீரர்கள் அந்த விமானங்களை இயக்க கற்றுக்கொண்ட போதிலும், அதை யாராலும் இயக்க முடியவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். "பல்வேறு நிலைகளைக் கடக்கவேண்டிய பயிற்சியாக அவை இருந்ததால், சில காரணங்களால் நமது வீரர்கள் அந்த பயிற்சிகளை நிறைவு செய்யவில்லை. எனவே, இரண்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் டோர்னியரில் பறக்க உரிமம் பெற்ற நபர்கள் எவரும் தற்போது நமது படையில் இல்லை." என்று அவர் கூறயுள்ளார்.