தாய்லாந்தின் பிரபல சுற்றுலாத் தலம் புக்கெட்டில் பயங்கர வெள்ளம்; புதன்கிழமை வரை தொடரும் கனமழை
செய்தி முன்னோட்டம்
தாய்லாந்தின் புகழ்பெற்ற சுற்றுலா தலமான புக்கெட் தீவில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தீவின் மூன்று மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள நீரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் பெய்த கொட்டித்தீர்த்த மழையால் புக்கெட் நகரம் உள்ளிட்ட பல பகுதிகள் நீரிலும் சேற்றிலும் மூழ்கின. வெள்ளப்பெருக்குடன் சில பகுதிகளில் மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. நீர்வரத்துக் கால்களில் அடைப்புகளை ஏற்படுத்திய குப்பைகளையும் மண்ணையும் அகற்றும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றாலும், சுமார் 100 குடும்பங்கள் இந்த இயற்கை இடர்பாட்டினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பை கருதி சிறிய வாகனங்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளன.
கனமழை எச்சரிக்கை
புதன்கிழமை வரை தொடரும் கனமழை எச்சரிக்கை
தாய்லாந்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தெற்கு தாய்லாந்தில் வரும் புதன்கிழமை வரை தொடர் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால் மீண்டும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
செப்டம்பர் நடுப்பகுதியில் தொடங்கிய பருவமழைக் கால வெள்ளத்திற்கு இதுவரை 83 பேர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.