இந்தியாவுடன் போர் தொடுத்து சரியான பாடம் கற்றுக்கொண்டோம் - பாகிஸ்தான் பிரதமர்
பாகிஸ்தானின் தவறை ஒப்புக்கொள்வது போல, பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் அண்மையில் ஓர் பேட்டியளித்துள்ளார். அதில் அவர், 'இந்தியாவுடன் போர்தொடுத்து சரியான பாடம் கற்றுக்கொண்டோம்" என்றும், இந்தியாவுடன் உள்ள பிரச்சனையை சுமூகமாக தீர்த்துக்கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பாகிஸ்தானில் மக்கள் ஆளும் கட்சி மீது பெரும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில், தடை செய்யப்பட்ட அமைப்பான தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்களை அதிகரித்துவருகிறது. இத்தகைய சூழலில்தான் பாகிஸ்தான் பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்து அவர் அந்த பேட்டியில், இந்தியாவுடன் மூன்று போர்கள் நடத்தியுள்ளோம் என்றும், அவை மக்களுக்கு துன்பம், வறுமை, வேலையின்மை மட்டுமே கொண்டுவந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
இந்திய பிரதமர் மோடியை நேர்மையான பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் பாகிஸ்தான் பிரதமர்
மேலும் பேசிய அவர், 'எங்கள் வளங்களை வெடிகுண்டுகள் மற்றும் வெடிமருந்துகள் மூலம் வீணடிக்க விரும்பவில்லை. இருநாட்டு ராணுவங்களிடமும் பல அதிநவீன ஆயுதங்கள் உள்ள நிலையில், போர் மூண்டால் பெரும் இழப்புகள் உண்டாகும். எனவே, இந்தியாவுடன் அமைதியான உறவை விரும்புகிறோம்" என்று கூறியுள்ளார். இதனையடுத்து, அமைதியான உறவு இருந்தால் இரு நாடுகளும் வளர்ச்சிபெறும், காஷ்மீர் போன்று நடக்கும் பல விஷயங்கள் குறித்து பிரதமர் மோடியுடன் நேர்மையாக பேச வேண்டும் என்று கூறிய அவர், பாகிஸ்தான் அமைதியை விரும்புகிறது என்றும் கூறினார். மேலும், அமைதியாக வாழ்ந்து வளர்ச்சிபெறுவதா அல்லது ஒருவருக்கொருவர் சண்டையிட்டு நேரத்தையும், வளத்தையும் வீணடிப்பதா என்பது இருநாடுகளின் கைகளில் தான் உள்ளது என்றும் அவர் கூறியது குறிப்பிடவேண்டியவை ஆகும்.