பாகிஸ்தான் பெஷாவர் குண்டுவெடிப்பில் 3 குழந்தைகள் உட்பட 7 பேர் காயம்
பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில், 3 குழந்தைகள் உட்பட குறைந்தது 7 பேர் காயமடைந்துள்ளதாக, அதிகாரிகளின் தகவல்களை மேற்கோள்காட்டி அந்நாட்டின் ஜியோ செய்திகள் செய்தி வெளியிட்டுள்ளது. சாலையில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் வெடித்ததால், பாபு கர்ஹி பகுதியின், வார்சாக் சாலைப் பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். காயமடைந்தவர்கள் லேடி ரீடிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு குழந்தைகள் கவலைக்கிடமாக உள்ளனர். மேலும், காயைமடைந்த குழந்தைகள் அனைவரும், 7- 10 வயது உடையவர்கள் என ஜியோ செய்திகள் கூறுகிறது. ஜியோ செய்திகளிடம் பேசிய அப்பகுதியின் காவல் கண்காணிப்பாளர் அர்ஷத் கான், குண்டுவெடிப்பு உள்ளூர் நேரப்படி காலை 9:10 நிகழ்ந்ததாக தெரிவித்தார்.
பாகிஸ்தானில் அரசுக்கு எதிரான வன்முறை 34% அதிகரிப்பு
சாலையோரத்தில் சிமெண்ட் கல் கொண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த, 4 கிலோ வெடி பொருட்கள் வெடித்ததால் இந்த வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. வெடிவிபத்து குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அர்ஷத் கான், திருடுவதற்காக குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரிக்கப்படும் என தெரிவித்தார். வெடி விபத்து ஏற்பட்ட அதிர்ச்சியில் சில கார் கண்ணாடிகளும், அருகில் இருந்த கட்டிடங்களின் கண்ணாடிகளும் உடைந்ததாக, மீட்பு அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த மாதத்தில், கைபர் பக்துன்க்வாவின், தேரா இஸ்மாயில் கான் பகுதியில் காவல்துறையினரை நோக்கி, நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலில் ஐவர் உயிரிழந்த நிலையில், 20 பேர் காயமடைந்தனர். மோதல் மற்றும் பாதுகாப்பு ஆய்வுகளுக்கான பாகிஸ்தான் நிறுவனத்தின்(PICSS) தரவுகளின் படி, கடந்த மாதம் பாகிஸ்தானில் அரசுக்கு எதிரான வன்முறை 34% அதிகரித்துள்ளது.