Loading...
பாகிஸ்தானில் சோதனைச் சாவடி மீது தற்கொலைப்படைத் தாக்குதல்: 12 ராணுவ வீரர்கள் உட்பட 15 பேர் பலி
பாகிஸ்தானில் சோதனைச் சாவடி மீது தற்கொலைப்படைத் தாக்குதல்

பாகிஸ்தானில் சோதனைச் சாவடி மீது தற்கொலைப்படைத் தாக்குதல்: 12 ராணுவ வீரர்கள் உட்பட 15 பேர் பலி

எழுதியவர் Sekar Chinnappan
Jul 24, 2026
08:11 pm

செய்தி முன்னோட்டம்

பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்க்வாவில் உள்ள டாங்க் மாவட்டத்தில் வியாழக்கிழமை (ஜூலை 23) இரவு பாதுகாப்புப் படையினரின் சோதனைச் சாவடியை குறிவைத்து பயங்கரமான தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட வாகனத்தைச் சோதனைக் சாவடியின் வெளிப்புறச் சுவரில் மோதி பயங்கரவாதிகள் இந்தத் தாக்குதலைச் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் 12 ராணுவ வீரர்கள், 2 காவலர்கள் மற்றும் ஒரு வனத்துறை அதிகாரி உட்பட மொத்தம் 15 பேர் உயிரிழந்துள்ளதாகப் பாகிஸ்தான் ராணுவம் வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பயங்கரவாதிகள்

தாக்குதலுக்குப் பின் 12 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பாதுகாப்புச் சாவடியின் எல்லைச் சுவரை உடைத்து உள்ளே நுழைய முயன்ற பயங்கரவாதிகளின் முயற்சி முறியடிக்கப்பட்டதால், அவர்கள் வாகனத்தை வெளிப்புறச் சுவரிலேயே மோதி வெடிக்கச் செய்துள்ளனர்.

இந்த சக்திவாய்ந்த வெடிவிபத்தால் சோதனைக் சாவடியின் கட்டடம் கடுமையாக சேதமடைந்தது.

தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி எதிர்த்தாக்குதலில் 12 பயங்கரவாதிகள் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டதாக ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சந்தேகம்

தெஹ்ரீக்-இ-தலிபான் அமைப்பின் மீது சந்தேகம்

இந்த தற்கொலைப்படைத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் நேரடியாகப் பொறுப்பேற்கவில்லை என்றாலும், அந்த பிராந்தியத்தில் தீவிரமாக செயல்பட்டு வரும் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பே இதற்குப் பின்னணியில் இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் ஆகிய மாகாணங்களில் சமீபகாலமாகப் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து நடத்தப்படும் பயங்கரவாதத் தாக்குதல்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது அங்குப் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

ஆப்கானிஸ்தான்

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே தீவிரமடையும் மோதல்

தங்கள் நாட்டு எல்லைக்குள் நடக்கும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு ஆப்கானிஸ்தானில் இயங்கும் தீவிரவாத அமைப்புகளே காரணம் என பாகிஸ்தான் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு முற்றிலும் மறுத்துள்ளது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே எல்லை மோதல் தீவிரமடைந்து வருகிறது.

கடந்த ஜூன் மாதம் ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் பலர் உயிரிழந்ததாக ஐநா சபை தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT